
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்று வியாழக்கிழமை காலை கோலாகலமாக ஆரம்பமாகியது.
பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளுடன் பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் ஆம்பமாகின. பல்கலைக்கழக வேந்தர் தகைசால் பேராசிரியர் இ.குமாரவடிவேல் பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை தாங்கி நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன், வேந்தர் தகைசால் பேராசிரியர் இ.குமாரவடிவேலும், துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவும் பட்டங்கள், பதக்கங்கள் மற்றும் பரிசில்கள், தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கிக் கௌரவித்தனர்.
மரபார்ந்த பண்பாட்டு அணிவகுப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள், பீடாதிபதிகள், நிதியாளர், நூலகர், மற்றும் பதிவாளர் அணிவகுத்து வர, கொடி குடை ஆலவட்டங்கள் சகிதம் விழா அரங்குக்கு வருகைதந்த துணைவேந்தரும், வேந்தரும் பட்டங்களையும், பரிசில்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கினர்.
இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாள்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு வைபவத்தில் மூவாயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
இம்முறை பட்டமளிப்பு விழாவின் போது, 376 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2557 உள்வாரி மாணவர்களுக்கும், 252 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 66 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களுடன் ஒருவருக்கு வியாபார நிர்வாகத்தில் சான்றிதழ் அடங்கலாக 3 ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
இப்பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞானபீடம், கலைப்பீடம், விஞ்ஞானபீடம், விவசாயபீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், இந்துக்கற்கைள் பீடம், சேர். பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தைச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் 376 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2557 உள்வாரி மாணவர்களுக்கும், 252 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 66 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும், வழங்கப்பட இருப்பதுடன், ஒருவர் வியாபார நிர்வாகத்தில் சான்றிதழையும் பெற இருக்கின்றார்.
ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் சீர்பெறும் விருதான பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப்பதக்கங்கள் வழங்கப்படவிருக்கின்றன. இதன்படி 2021ம் கல்வியாண்டுக்குரிய பல்கலைக்கழக அடிப்படையிலான தங்கப்பதக்கத்தைக் கலைப்பீடத்தைச் சேர்ந்த ஒருவர் பெற்றுக் கொள்கின்றார்.
பீடமட்டத்தில் 2022ம் கல்வியாண்டுக்குரிய தங்கப் பதக்கத்தைக் கலைப்பீடத்தில் இருந்து ஒருவரும், விஞ்ஞான பீடத்தில் இருந்து ஒருவரும் பெறுகிறார்கள்.
பீடமட்டத்தில் 2023ம் கல்வியாண்டுக்குரிய தங்கப் பதக்கத்தை முகாமைத்துக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து ஒருவரும், மருத்துவ பீடத்தில் இருந்து ஒருவரும் பெறுகின்றனர்.
மேலும், 2022ம் கல்வியாண்டுக்குரிய தூய மற்றும் பிரயோக விஞ்ஞானத்தில் சிறந்த செயலாற்றுகைக்கான பேராசிரியர் கந்தையா குணரட்ணம் தங்கப்பதக்கத்தைப் பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவர் பெறவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பயணிக்கும் வேளையில், 40ஆவது பட்டமளிப்பு விழா இடம்பெற இருப்பது