Sangathy News

PTA, PSTA எதுவும் வேண்டாம் – யாழ் நூலகத்தில் விசேட செயலமர்வு!

நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதச் சட்டத்தையும் உருவாக்கப்படும் அதற்கு ஈடான சட்டத்தையும் இல்லாது செய்து மக்களின் மீது திணிக்கப்படும் அச்சுறுத்தல்களையும் அடக்கு முறைகளையும் நிறுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு நோக்குடன் ‘சட்டம் மற்றும் சமூக நம்பிக்கையின் மக்கள் பாராளுமன்றம்’ என்ற அமைப்பு இன்று வெள்ளிக்கிழமை செயலமர்வொன்றை முன்னெடுத்தது.

யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் பல்தரப்பட்ட அமைப்புகளின் பிரசன்னத்துடன் இந்த செயலமர்வு நடைபெற்றது

இந்த செயலமர்வில் சட்டத்தரணி பெனிஸ்லாஸ் ருஷான் கருத்துரைக்கையில் –

இலங்கையில் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காக 1979 ஆம் ஆண்டு 48 ஆம் எண் கொண்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ஒரு தற்காலிகச் சட்டமாகவே அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் அது 1982 இல் நிரந்தர சட்டமாக மாறியது. தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டங்கள், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசாங்கங்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

PTA இன் கீழ் நீதித்துறையின் மேற்பார்வை இல்லாமல் நபர்களை கைது, நீண்டகால தடுப்புக்காவல், சித்திரவதை, குறிப்பாக இன சிறுபான்மையினர், அரசியல் எதிரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை அடக்குமுறை செய்தல் போன்ற கடுமையான மனித உரிமை மீறல்கள் பதிவாகியுள்ளன.

1983-2009 உள்நாட்டுப் போரின் போது தமிழ் மக்களுக்கு எதிராகவும், 1988-89 ஆம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னனி மற்றும் மாணவர் இயக்கங்களுக்கு எதிராகவும், 2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும், 2022 போராட்டத்திற்குப் பிறகு போராட்டக்காரர்களுக்கு இந்தச் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அரசு PTA யை இரத்துச் செய்வதாக ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மட்டத்தில் பல சந்தர்ப்பங்களில் உறுதியளித்திருந்தாலும், அது நடைமுறையில் செயல்படுத்தப்படவில்லை.

இன்னிலையில் 2024 இல் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, தேசிய மக்கள் சக்தி PTA ரத்து செய்யப்படும் என்று மக்களுக்கு உறுதியளித்தது.

அந்தக் கொள்கை அறிக்கைகளில், “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களும் ரத்து செய்யப்படும்” என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், PTA -ஐ ஒழிப்போம் என்ற போர்வையில், தற்போது பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு (PSTA) முன்வைக்கப்பட்டமை, மக்கள் ஆணைக்கு எதிரான செயலாக இருக்கின்றது.

அதுமட்டுமன்றி இலங்கையில் ஏற்கனவே தண்டனைச் சட்டக் கோவை, பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகள்,அதன் உளவுத்துறை சேவைகள், பயங்கரவாத விசாரணைப் பிரிவுகள் மற்றும் சட்ட பொறிமுறைகள் இருப்பதால், தனித்தனி அடக்குமுறை பயங்கரவாதச் சட்டங்கள் தேவையில்லை.

PTA -வின் கீழ் பல ஆண்டுகளாக நியாயமற்ற வகையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நபர்கள் இருந்தாலும், அவர்கள் அனுபவித்த அநீதிகளுக்கு சமூக அல்லது சட்டரீதியான இழப்பீடுகள் ஏதும் கிடைக்கவில்லை.

இந்தச் சட்டங்கள் வரலாறு முழுவதும் மக்களை மிரட்டவும் அடக்குமுறைக்கான கருவிகளாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

PSTA நிறைவேற்றப்பட்டால், சாதாரண குடிமக்களின் கருத்து சுதந்திரம், எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை மற்றும் தனியுரிமை என்பன கடுமையாக கட்டுப்படுத்தப்படும்.

எனவே, இந்தச் சட்ட வரைவு குறித்து பொதுமக்களை விழிப்புணர்வு செய்தல், நீதி அமைச்சு ஊடாக எதிர்ப்பு கருத்துகளை முன்வைத்தல் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு பொதுமக்களின் எதிர்ப்பினை தெளிவாக அறிவித்தல்
சமூக ஊடகங்கள் மற்றும் பொது உரையாடல் மூலம் திறந்த விவாதத்தை முன்னெடுத்தல் என்பன அத்தியவசியமான செயற்பாடுகளாகும். – என்றார்.

இந்த சட்ட வரைவை தோற்கடிப்பதன் மூலம் மட்டுமே இலங்கையின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் அனைத்து குடிமக்களின் சுதந்திரங்களையும் பாதுகாக்க முடியும் என்றும் இந்த செயலமர்வில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Selvarajah
Exit mobile version