அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த உலகளாவிய வரி விதிப்பு சட்டவிரோதமானது என அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வேறு ஒரு சட்டப் பிரிவின் கீழ் இந்தியாவுக்கான வரியை 10% என்ற அளவில் அதிபர் நிர்ணயித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (ஐ.இ.இ.பி.ஏ.) கீழ், பரஸ்பர வரி விதிப்பு முறையை கொண்டு வந்தார். இந்த சட்டத்தின் கீழ், பல்வேறு நாடுகளுக்கும் அந்த நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வரிகளை விதித்தார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததால், இந்தியா மீதான வரியை 50% ஆக உயர்த்தினார். இதுபோல், பல நாடுகளுக்கும் அவர் வரியை நிர்ணயித்தார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் இவ்வாறு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து ‘லேர்னிங் ரிசோர்சஸ், வி.ஓ.எஸ் செலக்சன்ஸ் என்ற நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த உச்சி நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான அமர்வு, வரிகளை விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது; ஐஇஇபிஏ சட்டம் அதிபருக்கு வரிகளை விதிக்க அனுமதி அளிக்கவில்லை என்று கூறியது.
இதனால், ட்ரம்ப் விதித்த வரிகள் முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டது. இந்நிலையில், 1974ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வர்ததக சட்டத்தின் பிரிவு 122ன் கீழ், 150 நாட்களுக்கு பயன்படுத்துவதற்கான தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்ட நாடுகளுக்கான வரி 10% ஆக இருக்கும் என அறிவித்தார்.
இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகாத நிலையில், இந்தியாவுக்கான இறக்குமதி வரி எவ்வாறு இருக்கும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த டொனால்ட் ட்ரம்ப், ‘‘எதுவும் மாறாது. அவர்கள் வரிகளைச் செலுத்துவார்கள். நாங்கள் வரிகளை செலுத்த மாட்டோம். இது முன்பு இருந்ததற்கு நேர்மாறானது.
இந்திய பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர். அவரை எதிர்க்கும் மக்களைவிட அவர் புத்திசாலி. அவர் எங்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருந்தார். எனவே, நாங்கள் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தோம். அது இப்போது ஒரு நியாயமான ஒப்பந்தம். அவர்கள் வரி செலுத்துகிறார்கள். நாங்கள் வரிகளை செலுத்த மாட்டோம். இந்தியா உடனான ஒப்பந்தம் தொடங்கிவிட்டது. அனைத்து ஒப்பந்தங்களும் தொடங்கி உள்ளன’’ என தெரிவித்தார்.
இந்தியா உடனான தனது உறவு குறித்த கேள்விக்கு, ‘‘இந்தியா உடனான எனது உறவு அற்புதமானது. நாங்கள் இந்தியாவுடன் வர்த்தகம் செய்கிறோம். இந்தியா, ரஷ்யாவில் இருந்து வெளியேறியது. இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கிக் கொண்டிருந்தது. எனது வேண்டுகோளின்படி அவர்கள் பின்வாங்கினர். ஏனெனில், நாங்கள் அதை (உக்ரைன் போர்) தீர்க்க விரும்புகிறோம்’’ என தெரிவித்தார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், ‘‘அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்ட அனைத்து நாடுகளுக்குமான தற்காலிக வரி 10% ஆக குறைகிறது. இந்தியாவுக்கும் இது பொருந்தும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
