பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட12 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட12 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

Sea Of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு படகில் பயணித்த, படகின் உரிமையாளர் உள்ளிட்ட 13 மீனவர்கள், 10 வருட ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சாதாரண சிறைத்தண்டனை எனும் நிபந்தனையுடன் கடந்த 22 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். 

எனினும், கைது நடவடிக்கையின் போது மீனவர்களால் தாக்கப்பட்டு இலங்கை கடற்படையினர் மூவர் காயமடைந்தமை தொடர்பான குற்றச்சாட்டில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்கள், 10 வருட ஒத்திவைக்கப்பட்ட 12 மாத சாதாரண சிறைத்தண்டனை எனும் நிபந்தனையுடன் கடந்த 28 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். 

ஏனைய 12 மீனவர்களுக்கு எதிரான வழக்கில், படகின் உரிமையாளரையும் குறித்த வழக்கின் முதலாவது சந்தேகநபராக இணைத்து, சந்தேகநபருக்கு அழைப்பாணை அனுப்புமாறு நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. 

இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் விளக்கத்தை வழங்க வேண்டியிருப்பதன் காரணமாக அவர்களை நேற்று(10) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீரியல்வளத்துறை திணைக்களத்தினரால் மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

அதற்கமைய, குறித்த 12 இந்திய மீனவர்களும் நேற்று(10) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபர்களை நாளை(12) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கிருஷாந்தன் பொன்னுதுரை உத்தரவிட்டார். 

நாளை(12) சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை வாசிக்கப்படும் எனவும் அதுவரை  இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles