விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை கொண்டுள்ளதாக தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு

Colombo (News 1st) இன்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக சோழர்களின் ஆட்சிக்காலத்தில் வருடத்தின் முதலாவது அறுவடைக்காக ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்படும் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாட்டம், வளமான அறுவடையையும், புதிய ஆரம்பத்திற்கான நம்பிக்கையையும் குறிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

இரண்டு வருடங்களாக விவசாயிகளின் அர்பணிப்புகளுக்கு மத்தியில் நாடு வெற்றிப் பாதைக்குள் பிரவேசிக்கும் வேளையில், தைப்பொங்கல் பண்டிகை இம்முறை கொண்டாடப்படுவதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

வீழ்ச்சி கண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

விவசாயத்தை நவீனமயப்படுத்துவதன் மூலம் நாடளாவிய ரீதியில் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தத் தேவையான திட்டங்களை அரசாங்கம் தற்போது செயற்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும், அந்த அனைத்து பணிகளும் வெற்றியளிக்க இம்முறை தைப்பொங்கல் தினத்தில் இயற்கையின் ஆசிர்வாதம் கிட்ட வேண்டுமென பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

இயற்கையோடு இயைந்த பாரம்பரிய வாழ்வொழுங்கின் மீது நம்பிக்கை கொண்ட தமிழ் விவசாயிகள், சிறந்த விளைச்சலை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் இந்த அறுவடைத் திருவிழா, தேசத்தின் உயிர் நாடியின் பிரதிபலிப்பாக அமையும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமிய மறுமலர்ச்சி என்ற எண்ணக்கருவுக்கு சிறந்ததோர் உந்துசக்தியாகும் என தைப்பொங்கல் வாழ்த்து செய்தியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வளம் நிறைந்த புத்தாண்டின் விடியலைக் குறிக்கும் தைத் திருநாளைக் கொண்டாடும் உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு பிரதமர் தமது  வாழ்த்துகளையும் பகிர்ந்துள்ளார்.

தைப்பொங்கல் என்பது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பரஸ்பர பிணைப்புக்கு நன்றி தெரிவிக்கும் சிறந்த நிகழ்வாகும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டில் உருவாக்கப்பட்ட வங்குரோத்து நிலையால் ஏற்பட்ட சவால்மிக்க ஆண்டின் முடிவில் இன்னும் பல சவால்களுடன் இன்னுமொரு ஆண்டிற்குள் நுழைந்துள்ளதாகவும், இனம், மதம், ஜாதி, குலம் என்ற வேறுபாடின்றி இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். 

இதற்கு தேவையான இயற்கையின் ஆசிர்வாதங்களை இந்த தைப்பொங்கல் தினத்தில் பெற்று உலகின் முதற்தர நாடாக மாற்றுவதற்கான புதிய பயணத்திலும் புதிய மாற்றத்திலும் இணைந்துகொள்ளுமாறு உலகெங்கிலுமுள்ள இலங்கையர்களையும் கேட்டுக்கொள்வதாக சஜித் பிரேமதாச தனது தைத்திருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles