பாகிஸ்தானில் கனமழை : 87 பேர் உயிரிழப்பு – வீடுகள் கடும் சேதம்..!

பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 87 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 82 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) தெரிவித்துள்ளது.

மழையால் நாடு முழுவதும் 2,715 வீடுகள் சேதமடைந்துள்ளன. கட்டுமான இடிபாடுகள், மின்னல் தாக்குதல் மற்றும் திடீர் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் பெரும்பாலான மக்கள் இறந்ததாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெரும்பாலான சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு மட்டும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 53 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் மொத்தம் 15 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் காயமடைந்தனர். அதே நேரத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெய்த கனமழையால் 11 பேர் இறந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

அண்மையில் பெய்த கனமழையால் உயிர்கள் மற்றும் உடைமைகள் இழப்புக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், மழை மற்றும் நிலச்சரிவால் மூடப்பட்ட சாலைகளைத் திறப்பதற்கான பணிகளை விரைவுபடுத்தவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக நேற்று வானிலை முன்னறிவிப்பு அறிக்கையில்,

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வரும் ஏப்ரல் 22 வரை தொடர்ந்து மழை நீடிக்கும் என்று கணித்துள்ளது. மேலும், எதிர்பார்க்கப்படும் மழை நாட்டின் பல பகுதிகளில் திடீர் வெள்ளத்தைத் தூண்டக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles