Saturday, February 7, 2026
Homeகாலா, கபாலி உதவி இயக்குநரை திருமணம் செய்யவுள்ள நடிகை மேகா ஆகாஷ்..!

காலா, கபாலி உதவி இயக்குநரை திருமணம் செய்யவுள்ள நடிகை மேகா ஆகாஷ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான பேட்ட படம் மூலம் பிரபலமானவர் மேகா ஆகாஷ். கவுதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். மேகா ஆகாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மழை பிடிக்காத மனிதன். விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த அந்த படத்தில் அழகாக நடித்திருந்தார் மேகா.

தமிழ் தவிர்த்து தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் மேகா ஆகாஷும், தமிழகத்தை சேர்ந்த பிரபல அரசியல்வாதியின் மகனும் காதலிக்கிறார்கள் என கடந்த ஓராண்டு காலமாக பேசப்பட்டது. ஆனால் அந்த காதலர் யார் என தெரியாமல் ரசிகர்கள் குழம்பினார்கள்.

தமிழகத்தில் எந்த அரசியல்வாதிகளுக்கு எல்லாம் திருமண வயதில் மகன் இருக்கிறார் என கூகுளிடம் கேட்டு வந்தார்கள் மேகா ஆகாஷின் ரசிகர்கள்.

இந்நிலையில் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மேகா. அதில் தன் வருங்கால கணவரான சாய் விஷ்ணுவின் இன்ஸ்டா கணக்கை மென்ஷன் செய்திருக்கிறார். அதை பார்த்தவர்களோ, யார் இந்த சாய் விஷ்ணு என அவரின் இன்ஸ்டா பக்கத்திற்கு சென்றால் அது பிரைவேட் என வந்ததை பார்த்து அதிருப்தி அடைந்தார்கள்.

அந்த சாய் விஷ்ணு வேறு யாரும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசரின் இளைய மகன் தான். சென்னையில் இருக்கும் லயோலா கல்லூரியில் பி. காம் படித்திருக்கிறார். பட்டம் வாங்கியதும் அமெரிக்காவுக்கு சென்று படம் இயக்குவது குறித்து படித்துவிட்டு நாடு திரும்பினார் சாய் விஷ்ணு.

ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான காலா, கபாலி ஆகிய படங்களில் பா.ரஞ்சித்துக்கு உதவி இயக்குநராக வேலை செய்திருக்கிறார். திரையுலகில் இருக்கும் விஷ்ணுவை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் மேகா ஆகாஷ்.

சாய் விஷ்ணு, மேகா ஆகாஷின் திருமண அழைப்பிதழ் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இதற்கிடையே அரசியல் தலைவர்களை சந்தித்து தன் மகனின் திருமண அழைப்பிதழை வழங்கி வருகிறார் திருநாவுக்கரசர். டெல்லிக்கு சென்று ராகுல் காந்தியை சந்தித்து அழைப்பிதழ் அளித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் அவர்.

RELATED ARTICLES

Most Popular