இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விருப்பம்

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த மிக முக்கிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு ஒன்று இதற்கு பொறுப்பேற்றது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 7-ந் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ தாக்குதல் தொடங்கியது. இந்திய படைகள் பாகிஸ்தானின் பயங்கரவாத தளங்களை குறிவைத்து தாக்கின. பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். பதிலுக்கு பாகிஸ்தானும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவத்தினர் வழியிலேயே முறியடித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்களாக சண்டை நடந்தது. கடந்த 10-ந் தேதி சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இனிமேல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறுவதை பற்றி மட்டுமே நடத்தப்படும் என்று இந்தியா கூறி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவுடன் கூட்டு பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தர், பாகிஸ்தான் செனட் சபையில் பேசுகையில், “இந்தியா-பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குனர்கள் பேச்சுவார்த்தை, மே 18-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 18-ந் தேதிவரை சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசியல் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் கூட்டு பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று உலகத்துக்கு சொல்லி இருக்கிறோம். சிந்துநதி ஒப்பந்தத்தை சட்டவிரோதமாக நிறுத்தி வைப்பதன் மூலம், பாகிஸ்தானுக்கு தண்ணீர் வருவதை நிறுத்துவது போராக கருதப்படும்” என்று அவர் பேசினார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடைசியாக கடந்த 2003-ம் ஆண்டு கூட்டு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்சினைகளையும் பேச திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலுக்கு பிறகு பேச்சுவார்த்தை முறிந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles