கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்ற லைபீரிய சரக்குக் கப்பல் மூழ்கிய விபத்தை பேரிடராக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், பலத்த காற்று வீசியதன் காரணமாக, அரபிக் கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனைத் தொடர்ந்து, கப்பலில் இருந்த எரிபொருள் அடங்கிய கொள்கலன்களும் கடலில் மூழ்கின. இதனையடுத்து, மாநிலம் தழுவிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், கடலில் கப்பல் மூழ்கிய விபத்தை பேரிடராக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து 13 ஆபத்தான சரக்குகளைக் கொண்ட 640 கொள்கலன்களுடன் லைபீரிய நாட்டு சரக்குக் கப்பல், கொச்சியில் இருந்து தென்மேற்கே சுமார் 70 கி.மீ. தொலைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தின்போது, கப்பலில் இருந்த 24 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இருப்பினும், கல்சியம் கார்பைடு கொண்ட 12கொள்கலன்களும், 84.44 மெற்றிக் டொன் டீசல் மற்றும் 367.1 மெற்றிக் தொன் எரிபொருள் எண்ணெய் அடங்கிய கொள்கலன்களும் கடலில் மூழ்கியதால், நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கப்பல் விபத்து நடந்த இடத்தைச் சுற்றியுள்ள 20 கடல் மைல் சுற்றளவில் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டது.

பொதுமக்கள், சுற்றுச்சூழல் மற்றும் மீன்பிடித் தொழில் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது. கரை ஒதுங்கும் பொருட்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கடலோரப் பகுதி தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாசுக் கட்டுப்பாட்டு சபையின் தலைமையிலான மீட்புக் குழுக்கள், கடற்கரையை அடையும் எந்தவொரு எண்ணெய்க் கசிவையும் கையாளத் தயாராக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here