அமெரிக்காவில் வசிக்கும் சீன நபர் ஒருவர் வடகொரியாவுக்குத் துப்பாக்கிகளையும் வெடிபொருள்களையும் ஏற்றுமதி செய்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஜூன் 9ஆம் திகதி ஒப்புக்கொண்டுள்ளார்.

செங்குவா வென் எனும் அந்த 42 வயது நபர், மாணவர் விசா முடிவடைந்த பிறகும் சட்ட விரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர் என்று கூறப்பட்டது.வென், நீண்டகாலமாக நடப்பிலிருக்கும் வடகொரியா மீதான அமெரிக்கத் தடையை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

வடகொரியாவுக்கு ஆயுதங்களை அனுப்பியதன் மூலம் வென், US$ 2 மில்லியன் (S$2.57 மில்லியன்) ஈட்டியதாக அமெரிக்க நீதித்துறை கூறியது. கடந்த டிசம்பர் மாதம் கலிஃபோர்னியாவில் அவர் கைது செய்யப்பட்டார்.

வென்னும் அவருக்கு உடந்தையாக இருந்தோரும் , கலிஃபோர்னியாவின் லாங் பீச்சிலிருந்து ஹாங்காங் வழியாக வடகொரியா சென்ற கொள்கலன்களில் துப்பாக்கிகளையும் வெடிபொருள்களையும் மறைத்து அனுப்பியதாகக் கூறப்பட்டது.

வடகொரியாவுக்கு அனுப்புவதற்காக வென் வைத்திருந்த இரு கருவிகளைக் கடந்த ஆகஸ்ட் மாதம் அமலாக்கதுத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.அவற்றில் ஒன்று, வேதிப்பொருள் மிரட்டலை அடையாளம் காணும் கருவி.மற்றொன்று கையில் வைத்துப் பயன்படுத்தக்கூடிய விரிவலைத் தகவல் பரிமாற்றக் கருவி. அது ஒட்டுக்கேட்கும் கருவிகளைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டது.

அடுத்து, செப்டம்பர் மாதம், வடகொரியாவுக்கு அனுப்புவதற்காக வென் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் 50,000 தோட்டாக்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.மேலும், அமெரிக்காவிலிருந்து பயணிகள் விமானம் ஒன்றை வாங்கவும் வென் முயன்றதாகக் கூறப்பட்டது.

வடகொரியா மீதான ஏற்றுமதித் தடையை மீறிய குற்றத்துக்கு 20 ஆண்டுச் சிறைத்தண்டனையும், வெளிநாட்டு அரசாங்கத்திற்குச் சட்டவிரோதமாக வேலைபார்த்த குற்றத்துக்கு அதிபட்சம் பத்தாண்டுச் சிறைத்தண்டனையும் அவருக்கு விதிக்கப்படலாம்.ஆகஸ்ட் 18ஆம் திகதி, வென்னுக்குத் தண்டனை விதிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here