இந்தியா- பாகிஸ்தான் சண்டையின்போது 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: டிரம்ப்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம்களை இந்தியாவின் முப்படைகள் துல்லியமாக தாக்கி அழித்தன. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு தெரிவித்தது.

இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. அதை இந்தியா சிறப்பான வகையில் தடுத்து நிறுத்தியது. 3 நாட்களுக்கு மேலாக சண்டை நீடித்த நிலையில், இந்தியா- பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

ஆனால், டொனால்டு டிரம்ப் தன்னுடைய முயற்சியால்தான் இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்தப்பட்டது என தெரிவித்தார். ஆனால் பாகிஸ்தான் உடனான சண்டை நிறுத்தத்தில் 3ஆவது நாடு தலையீடு இல்லை என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால், வர்த்தகம் மூலமாக நான்தான் சண்டையை நிறுத்தினேன் என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்த நிலையில் மீண்டும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டையை நான்தான் நிறுத்தினேன் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-

நாங்கள் (அமெரிக்கா) ஏராளமான போரை நிறுத்தியுள்ளோம். இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டை மிகவும் தீவிரமாக சென்று கொண்டிருந்தது. அங்கு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. உண்மையிலேயே 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நான் நினைக்கிறேன்.

இரண்டும் தீவிர அணுசக்தி நாடு. இருவரும் மாறிமாறி தாக்கிக் கொண்டனர். அது ஒரு புது வடிவிலான போர் போன்றது என்பது உங்களுக்கு தெரியும். சமீபத்தில் ஈரானில் நாங்கள் அணுசக்தி திட்டங்களை தாக்கி அழித்ததை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

ஆனால் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டை முன்னும், பின்னுமாக சென்று கொண்டிருந்தது. மிகவும் அதிக அளவில் சென்று கொண்டிருந்தது. நாங்கள் வர்த்தகம் மூலம் அதை தடுத்து நிறுத்தினோம். நீங்கள் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறீர்கள் என்று நாங்கள் சொன்னோம்.

மிகவும் சக்திவாய்ந்த அணுசக்தி நாடுகளாக நீங்கள் ஆயுதங்களை வீசப் போகிறீர்கள் என்றால், ஒருவேளை அணு ஆயுதங்களை வீசப் போகிறீர்கள் என்றால், நாங்கள் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளப்போவதில்லை என்று கூறினோம்.

இவ்வாறு டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. இதை முதலில் இந்தியா மறுத்தது. பின்னர் இந்திய ராணுவ அதிகாரி இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ஒப்புக்கொண்டார். ஆனால் 5 விமானங்கள் என்பதை திட்டவட்டமாக மறுத்திருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles