கண்டி, பேராதனை வீதியிலுள்ள இரண்டு மாடிக் கட்டடமொன்றில் அமைந்துள்ள அழகுக்கலை நிலையமொன்றினுள் இருந்த சிலர் திடீரென மயக்கமடைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
முதலில், அருகிலுள்ள வர்த்தக நிலையத்தைச் சேர்ந்த ஒருவர், குறித்த அழகுக்கலை நிலையத்தின் வரவேற்பறைக்கு முன்பாக பெண் ஒருவர் மயக்கமடைந்து கிடப்பதை அவதானித்துள்ளார்.
பின்னர் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு மேலும் ஆறு இளம் பெண்களும் ஒரு ஆணும் மயக்கமடைந்து கிடந்துள்ளனர்.
இதனையடுத்து, காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, மயக்கமடைந்திருந்த குழுவினரை மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவர்களில் ஆறு பேர் கண்டி தேசிய மருத்துவமனையிலும், மேலும் இருவர் கண்டியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் நால்வர் குறித்த அழகுக்கலை நிலையத்தின் பணியாளர்கள் எனவும், ஏனையோர் சேவை பெற வந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
அழகுக்கலை நிலையம் அமைந்துள்ள பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அழகு நிலையத்திலிருந்த மின் பிறப்பாக்கியை பயன்படுத்தி மின்சாரம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்போது, மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேறிய நச்சுப்புகை வளசீராக்கி ஊடாக, அழகுக்கலை நிலையத்துக்கு ஊடுருவியதால் அங்கிருந்தவர்கள் மயக்கமடைந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன.
இது தொடர்பான காணொளி தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
