ரஷியாவை நோக்கி 2 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் – டிரம்ப் உத்தரவு

ரஷ்யாவிற்கு அருகே 2 அணுஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். அணு ஆயுதம் குறித்து அச்சுறுத்தும் வகையில் பேசிய ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை டிரம்ப் எடுத்துள்ளார். .

உக்ரைன் – ரஷியா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் சண்டை உட்பட பல போர்களை தடுத்து நிறுத்தியதாக தம்பட்டம் அடுத்துவரும் டிரம்ப் முயற்சித்தும் கூட உக்ரைன் – ரஷியா போரை நிறுத்த முடியவில்லை.

இதனால் கோபமடைந்த டிரம்ப் உக்ரைனில் போரை நிறுத்த ரஷிய அதிபர் புதினுக்கு தான் அளித்த 50 நாள் காலக்கெடுவை 10 முதல் 12 நாட்களாக குறைத்தார்.

ஆகஸ்ட் 7-9க்குள் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். இல்லையெனில் ரஷியா மீது வர்த்தக கட்டுப்பாடுகளும் 100 சதவீதம் வரியும் விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்தார்.

மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார். இந்தியாவும், ரஷியாவும் இறந்த பொருளாதாரங்கள் (Dead Economies) என்று விமர்சித்தார்.

இதனிடையே, டிரம்பின் கருத்துக்கு ரஷிய முன்னாள் அதிபரும், ரஷிய பாதுகாப்பு கவுன்சில் துணைத்தலைவருமான டிமிட்ரி மெட்வதேவ் தனது எக்ஸ் பக்கத்தில், “ரஷியா ஒன்றும் இஸ்ரேலோ, ஈரானோ அல்ல. ஒவ்வொரு காலக்கெடுவும் மிரட்டல், போருக்கான பாதை. இந்தியா, ரஷியாவின் இறந்த பொருளாதாரங்கள் குறித்த டிரம்ப்பின் பேச்சால் அவர் ஆபத்தான எல்லைக்குள் நுழைகிறார். அவர் இல்லாத இறந்த கைகள் (dead hand) எவ்வளவு ஆபத்தானது பற்றியும் நினைவில் கொள்ள வேண்டும்’ என தெரிவித்தார்.

இறந்த கைகள் (dead hand) என்பது ரஷியா – அமெரிக்கா பனிப்போரின்போது ரஷியாவால் அமைக்கப்பட்ட அணு ஆயுத தாக்குதல் கட்டமைப்பாகும். இந்த கட்டமைப்பு, ரஷியா மீது அமெரிக்கா அணு ஆயுத தாக்குதல் நடத்தி ரஷியாவின் தலைவர்கள் உயிரிழந்தபோதும், அணு ஆயுத கட்டளைகளை அளிக்காதபோதும், தன்னிச்சையாக ரஷியாவின் ஒட்டுமொத்த அணு ஆயுதங்களையும் அமெரிக்காவை நோக்கி ஏவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பனிப்போர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த அணு ஆயுத கட்டமைப்பு தற்போதும் செயல்பாட்டில் உள்ளது” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ரஷிய முன்னாள் அதிபர் டிமிட்ரியின் மிரட்டலை தொடர்ந்து ரஷியா நோக்கி அணு ஆயுதம் தாங்கிய 2 நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பி டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ரஷிய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வதேவின் முட்டாள்தனமான, ஆத்திரமூட்டும் மிரட்டல்களுக்கு பதிலடியாக அணு ஆயுதம் தாங்கிய 2 நீர்மூழ்கி கப்பல்களை ரஷியா நோக்கி நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன். வார்த்தைகள் மிகவும் முக்கியம். அந்த வார்த்தைகள் சில சமயங்களில் காரணமற்ற விளைவுகளை ஏற்படுத்தலாம். டிமிட்ரியின் தற்போதைய வார்த்தைகள் அதுபோன்ற விளைவுகளை ஏற்படுத்ததாது என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனை அடுத்து டிரம்பின் மிரட்டலுக்கு ரஷியா பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக பேசிய ரஷிய எம்.பி. விக்டர் வடலொட்ஸ்கெ, “அணு ஆயுதம் தாங்கிய அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்களை விட அணு ஆயுதம் தாங்கிய ரஷிய நீர்மூழ்கி கப்பல்கள் அதிகம். டிரம்ப் உத்தரவிட்ட அணு ஆயுதம் தாங்கிய 2 நீர்மூழ்கி கப்பல்களும் எங்கு உள்ளன. அதன் செயல்பாடுகள் குறித்து எங்களுக்கு தெரியும். எனவே, டிரம்ப்பின் கருத்துக்கு ரஷியாவிடமிருந்து அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்கள் நிலைநிறுத்தி பதிலடி கொடுக்க வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்தார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles