உலக யானைகள் தினம் இன்று…

குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடித்தமான விலங்கினம்.

உருவத்தில் மிகப்பெரியதாக இருந்தாலும், பொதுவாக அவைகள் மிகவும் சாதுவான குணம் கொண்டவை. ஆனால் அதனிடம் வம்பிழுத்தால்… அது மிரண்டால்…. தாங்காது. துவம்சம் செய்துவிடும்.

யானைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், அவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி உலக யானைகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் யானைகள் பற்றி சிறிது அறிந்து கொள்வோம்.

உலக அளவில் 2 வகையான யானைகள் உள்ளன. ஒன்று ஆப்பிரிக்க யானை மற்றொன்று ஆசிய யானை. இந்த 2 வகையான யானைகளுக்கும் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன.

குறிப்பாக ஆப்பிரிக்க யானைகளில் ஆண் மற்றும் பெண் இரண்டுக்குமே தந்தங்கள் இருக்கும். ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தங்கள் உள்ளன. தந்தம் இல்லாத ஆண் யானைகளும் காணப்படுகின்றன அவைகள் ‘மக்னா’ என்று அழைக்கப்படுகின்றன.

ஆப்பிரிக்க யானைகளுக்கு காதுகள் கழுத்தின் உயரத்திற்கு மேலாக நீண்டு இருக்கும். ஆசிய யானைகளுக்கு காதுகள் கழுத்தின் உயரத்திற்கு கீழே இருக்கும். கால்விரல்களை பொறுத்தவரை ஆப்பிரிக்க யானைகளுக்கு முன்னங்காலில் 4 அல்லது 5 விரல்களும், பின்னங்கால்களில் 3 அல்லது 4 விரல்களும் இருக்கும். ஆசிய யானைகள் முன்னங்கால்களில் 5 விரல்களும், பின்னங்கால்களில் 4 விரல்களும் இருக்கும். முதுகு பகுதியானது ஆப்பிரிக்க யானைகளுக்கு குழிவிழுந்து காணப்படும். ஆசிய யானைகளின் முதுகு பகுதி வளைந்து காணப்படும்.

ஆசிய யானைகள் இந்தியா, இலங்கை, பூட்டான், நேபாளம், பங்களாதேஷ், மியான்மர், சீனா, தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட 13 நாடுகளில் காணப்படுகின்றன.

ஆண் யானை 14 முதல் 15 வருடத்திலும், பெண் யானை 12 முதல் 13 வருடத்திலும் பருவமடையும். யானையின் கர்ப்பகாலம் 21 முதல் 22 மாதங்கள் ஆகும். யானைகளுக்கு கண்பார்வை மனிதனைவிட சற்று குறைவாக காணப்பட்டாலும் நுகரும் தன்மை அதிகம். யானைகளுக்கு ஞாபக சக்தி மிகவும் அதிகம்.

யானைகள் பல கிலோ மீட்டருக்கு அப்பால் ஏற்படும் நில அதிர்வு மற்றும் சுனாமி போன்றவற்றை எளிதில் கண்டறியும் திறன் கொண்டவையாகும். யானை குட்டி பிறந்து சுமார் 2 மணி நேரத்திலேயே நடக்க ஆரம்பித்து விடும். ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டும் மதம் வெளிப்படும். யானைகள் அதன் வழித்தடங்களை நன்கு அறிந்து வைத்திருக்கும். ஓராண்டில் சுமார் 500 முதல் 750 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் இடப்பெயர்ச்சி செய்யும்.

யானைகளின் சானத்தின் மூலம் 50-க்கும் மேற்பட்ட தாவர விதைகளை காடுகளில் பரப்புகின்றன. சானத்தில் உள்ள பலவகை பூச்சியினங்கள் பறவைகளுக்கு உணவாகின்றன. கரையான்களுக்கு உகந்த உணவாக யானை சானம் உள்ளது. யானைகள் செல்லும் பாதைகளை பயன்படுத்திதான் புலி, சிறுத்தைப்புலி, கரடி, செந்நாய் போன்ற விலங்குகள் இரவு நேரத்தில் ஓர் இடம் விட்டு இடம் நகருகின்றன.

யானைகள் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. இவற்றின் செரிமானத்திறன் மிகவும் மந்தமானது. எனவே, யானைகள் உண்ணும் உணவில் 40 சதவீதமே செரிமானம் ஆகும். நன்கு வளர்ந்த யானைகள், நாள் ஒன்றுக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன. நாள் ஒன்றுக்கு 200 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். யானைகளின் சராசரி ஆயுட்காலம் 80 முதல் 90 ஆண்டுகள் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது அத்தனை ஆண்டுகள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் யானைகள் வாழ்வது மிகக் கடினமாக உள்ளது.

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் யானைகள் வாழ்வதற்கு உகந்த இடமாக உள்ளது. எனவே இந்த மலையில் உள்ள முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை, மேகமலை, களக்காடு-முண்டந்துறை பகுதிகளில் யானைகள் அதிகம் வாழ்கின்றன.

எந்த ஒரு வனப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதோ அந்த வனப்பகுதி வளமான வனப்பகுதியாக இருக்கும் என்று வன ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதன்படி தமிழ்நாட்டில் மிக வளமான வனப்பகுதிகளான முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை ஆகிய இடங்களில் யானைகள் அதிகமாக வசிக்கின்றன.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles