அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது சரமாரியாக வரியை உயர்த்தி வருகிறார். அதன்படி அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்கள் மீது டிரம்ப், முதலில் 25 சதவீத வரி விதித்தார். இந்த வரிவிதிப்பு கடந்த 7-ந் தேதி அமலுக்கு வந்தது.

அத்துடன், ரஷியாவிடம் கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்கு அபராதமாக இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி அறிவித்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. எனவே, இந்திய பொருட்கள் மீதான வரிவிதிப்பு நேற்று முதல் 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதனிடையே, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்களை இந்தியா வாங்குவதை அமெரிக்க உயர் அதிகாரிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், உக்ரைனில் நடைபெறும் மோதலை ‘மோடியின் போர்’ என்றும் இந்தியர்கள் திமிர்பிடித்தவர்கள் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிகாரப்பூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகையின் ஆலோசகர், பீட்டர் நவேரா கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பீட்டர் நவேரா, உக்ரைனில் நடைபெறும் மோதல் ‘மோடியின் போர்’. இந்தியா குறைந்த விலையில் ரஷியாவிடம் இருந்து எண்ணெயை வாங்குவது அந்நாட்டின் ஆக்கிரமிப்பை தூண்டிவிடுவதோடு, அமெரிக்க வரி செலுத்துவோர் மீது சுமையை அதிகரித்துள்ளது. எங்களது வலியுறுத்தலை ஏற்று ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியில் 25 சதவிகிதத்தை குறைப்போம். இந்தியர்கள் இந்த விவகாரத்தில் மிகவும் திமிர்பிடித்தவர்களாக இருப்பது எனக்கு கவலை அளிக்கிறது. அவர்கள், எங்களிடம் அதிக வரிகள் இல்லை. இது எங்கள் இறையாண்மை. நாங்கள் விரும்பும் எவரிடமிருந்தும் எண்ணெய் வாங்கலாம் என்று கூறுகிறார்கள். இந்தியா தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்குவதன் மூலம், தனக்குக் கிடைக்கும் பணத்தை ரஷியா அதன் போர் இயந்திரத்திற்கு நிதியளிக்கிறது. உக்ரேனியர்களைக் கொல்கிறது. இந்தியாவின் செயலால் அமெரிக்காவில் உள்ள அனைவரும் பாதிப்பைச் சந்திக்கிறார்கள். மோடியின் போரால் அமெரிக்கா வணிகம், நுகர்வோர் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய பிரிவுகளில் அமெரிக்கா பெரும் இழப்பைச் சந்திக்கிறது என்று கூறியுள்ளார்.

நவரே, இந்தியா மீது குற்றம்சாட்டுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக அவர் இந்தியாவை ‘வரிதழ்களின் மகாராஜா’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here