போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹராக் கட்டா என்ற நதுன் சிந்தக்க விக்ரமரட்னவை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க பாதுகாப்பு செயலாளரினால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை, வழக்கின் விசாரணை நிறைவடையும் வரை தொடருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று (8) கொழும்பு மேல் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, தப்பிச் செல்ல சதி செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை அவர் எதிர்கொண்டுள்ளார்.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஸ்ட அரச சட்டத்தரணி சஜித் பண்டார இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
குறித்த வழக்கு இதற்கு முன்னர் எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், பிரதிவாதிக்கு எதிராக பாதுகாப்புச் செயலாளரால் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியானதன் பின்னர், அவரை விளக்கமறியலில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரச சட்டத்தரணி அறியப்படுத்தியிருந்தார்.
இருப்பினும், பிரதிவாதியின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அவரை தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைப்பதற்கு பாதுகாப்புச் செயலாளர் முடிவு செய்துள்ளதாக அரச சட்டத்தரணி நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து பிரதிவாதி சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி ஜாலிய சமரசிங்க அதற்கு கடுமையாக எதிர்ப்பை வௌியிட்டார்.
தமது கட்சிக்காரர் சுமார் இரண்டு வருடங்களாக தடுப்பு காவலில் இருப்பதாக சுட்டிக்காட்டிய சட்டத்தரணி வழக்கு நிறைவடையும் வரை அவரை மீண்டும் விளக்கமறியலில் வைப்பது நியாயமற்றது என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, தங்காலை பழைய சிறைச்சாலையில் உள்ள பயங்கரவாத விசாரணை பணியகத்தின் காவலில் பிரதிவாதி தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவார் என்று நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
பிரதிவாதியான ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்ன சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்ட மற்ற நான்கு பிரதிவாதிகளும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மேலும் அவர்களை வேறு ஒருநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
















