குறட்டை இதயக்கோளாறின் அறிகுறியா?

குறட்டை இதயக்கோளாறின் அறிகுறியா? என்ற கேள்விக்கு மருத்துவர் தரும் விளக்கம் வருமாறு:-

இந்தியாவில் மட்டும் 5 கோடி பேருக்கு மேல் குறட்டை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தூங்கும் போது மூச்சு தடைபடுதலை ஸ்லீப் ஆப்னியா என்றும் கூறுகிறார்கள். இந்த வார்த்தை இப்போது பரவலாக உச்சரிக்கப்படுகிறது.

நாம் சுவாசிக்கும் காற்றானது மூச்சுக்குழாய் வழியே நுரையீரலை அடைகிறது. இந்த பாதையில் தடைகள் ஏற்பட்டால் திசுக்கள் அதிர்வுறும். அப்போது குறட்டை ஏற்படுகிறது. தூங்கும்போது நாக்கு, தொண்டை பகுதிகளில் உள்ள தசைகள் தளர்வடைகின்றன. அந்த நேரத்தில் காற்று செல்லும்போது சுவாசப்பாதை சுருங்கியிருப்பதால் திசுக்கள் அதிர்வுறுகின்றன. மேலும் மல்லாந்து படுக்கும் போது நாக்கு சிறிது உள்வாங்கி தொண்டைக்குள் இறங்கி விடும். இதனாலும் சுவாசப்பாதையில் தடை ஏற்பட்டு குறட்டை ஏற்படுகிறது. குறட்டை என்பது அரைகுறையான தூக்கம் ஆகும்.

குறட்டை விடுபவர்களுக்கு இரவில் ஆக்சிஜன் சப்ளை குறைவாக இருக்கும். சிலர் இரவில் குறட்டைவிட்டபடி தூங்குவார்கள், அவர்களுக்கு அரை நிமிடம் மூச்சே நின்று விடும். பின்னர் அரக்கபரக்க எழுந்து உட்காருவார்கள். ஒரு நாளைக்கு மனிதனுக்கு 8 மணி நேரம் தூக்கம் அவசியம். அதிலும் 4 மணி நேரம் தொடர்ச்சியாக தூங்க வேண்டும். ஆனால் நமக்கே தெரியாமல் ஒவ்வொரு மணி நேரமும் தூக்கத்தை கெடுக்க கூடியது இந்த குறட்டை.

இரவில் தூக்கம் கெட்டுப்போனால் காலையில் எழுந்ததும் கடுமையாக தலை வலிக்கும். பகலில் புத்துணர்வே இல்லாமல் தூங்கி வழிவார்கள். வேலையில் கவனக்குறைவு ஏற்படும். ஞாபக மறதி உண்டாகும். இந்த நிலைமை நீடிக்கும் போது இதயத்துடிப்பில் பிரச்சினை ஏற்படும். தூக்கம் சரியாக இல்லை என்றால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நுரையீரல் பாதிப்பு, மூளை பாதிப்பு என்று பல நோய்களும் கைகோர்த்துக் கொள்ளும்.

குறட்டை வந்தால் மாரடைப்பு வர வாய்ப்புள்ளது.

மூளை பாதிப்பு ஏற்பட்டால் பக்கவாதம் வரும். இந்த இரண்டும் இல்லாவிட்டால் 2 முழங்கால்களிலும் பலமான வலி ஏற்படும். திருமணம் ஆன பின்னர் குழந்தை பிறக்க கூட தாமதம் ஆகும். குறட்டை விடுவதை சரி செய்ய வழி உண்டு. மேலும் வரும் குறட்டையால் வேறு எதாவது பாதிப்புகள் வர வாய்ப்புள்ளதா? என்பதை கண்டுபிடிக்கவும் வசதிகள் உள்ளன. மூக்கடைப்பு, சைனஸ் பிரச்சினை, தொண்டை பிரச்சினைகள், தைராய்டு, மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற பிரச்சினைகளால் குறட்டை வருகிறது என்று தெரிந்தால் அதற்கு சிகிச்சை பெறலாம். அதுபோன்ற பிரச்சினை இல்லாமல் குறட்டை வருகிறது என்றால் ஸ்லீப் ஸ்டடி என்றவொரு சிகிச்சை மேற்கொண்டு பார்க்க வேண்டும். ஸ்லீப் ஸ்டடி சிகிச்சை அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் இருக்கும்.

அந்த சிகிச்சைக்கு வருபவர்கள் இரவு 8 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வர வேண்டும். அங்கு குறட்டை வருபவரின் இதயம், மூளை என 15-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒயர்கள் பொருத்தி அதனை மருத்துவ எந்திரத்துடன் இணைப்போம். பின்னர் அவருக்கு தூக்கம் வந்ததும் தூங்கி விடலாம். அவருக்கு துணையாக உறவினர் ஒருவர் கூட இருக்கலாம். அடுத்த அறையில் இருந்து டெக்னீசியன் நோயாளியை கண்காணித்தபடி இருப்பார். அவர் தூங்கி எழுந்ததும் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை எந்திரத்தில் பதிவான பதிவு விவரங்கள் கிடைக்கும்.

இரவில் தூங்கும் போது ரத்த அழுத்தம் மற்றும் நாடித்துடிப்பு குறைய வேண்டும். பகலில் ரத்த அழுத்தம் 200 இருந்தால் இரவில் 160-க்கு வரவேண்டும். அதனால் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு குறைந்துள்ளதா? எவ்வளவு நேரம் மூச்சை நிறுத்துகிறீர்கள்? உங்களுக்கு தெரியாமலேயே குறட்டை எப்படி மூச்சை நிறுத்தி உங்கள் தூக்கத்தை கெடுக்கிறது என்ற விவரங்கள் எல்லாம் தெரியவரும். அந்த விவரங்களை கொண்டு எதனால் குறட்டை வருகிறது, மாரடைப்பு வருமா? என்பதை கண்டுபிடித்து விடலாம். அதன் மூலம் மேல் சிகிச்சை பெறலாம்.

குறட்டை நீங்க நோயாளிகளுக்கு முகக்கவசம் போன்ற சீ பேப் எந்திரம் (மூச்சு அழுத்தம் கொடுக்கும் கருவி) ஒன்று பொருத்தப்பட்டு ஆக்சிஜன் செலுத்தப்படும். பம்ப் மூலம் காற்று சீராக சென்று கொண்டு இருக்கும். இதனால் சுவாசிக்கும் காற்று தடைபடாது. இந்த சிகிச்சை மூலம் 3 மாதத்தில் குறட்டை நீங்கும். எனவே தினமும் குறட்டை விடுவது, குறட்டை சத்தத்தில் மாறுபாடு இருப்பது தெரிந்தால் நுரையீரல் சிகிச்சை சிறப்பு டாக்டரை அணுகுவது நல்லது. ஒழுங்கற்ற சுவாசத்துடன் குறட்டை விடுவது இதயநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles