வீட்டில் எலி இருக்கிறதா? கல்லீரலில் பாதிப்பு ஏற்படும்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

வீடுகளில் பொதுவாக கொசுத் தொல்லையும், எலித் தொல்லையும் இருக்கும். கொசுவால் மலேரியா காய்ச்சல் வரும். டெங்கு காய்ச்சல் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

இப்போது எலியால் கல்லீரல் காலியாகிவிடும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. வீடுகளில் காணப்படும் கருப்பு எலிகளில் 4-ல் ஒரு எலிக்கு சி.ஹெப்பாடிகா என்ற புழு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு விலங்கு மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 55 எலிகளை பிடித்து ஆராய்ச்சி செய்துள்ளார்கள். அதில் 38 சதவீத எலிகளில் இந்த தொற்று இருக்கிறது. அதாவது 10 எலிகளில் 4 எலிகள் இந்த பாராசைட்டை சுமக்கின்றன.

சென்னையில் உள்ள மக்கள் தொகை பெருக்கமும், மக்களோடு வாழும் இந்த எலிகளின் வாசமும் மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும்கூட மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

எலிகளில் இருந்து இந்த வகை புழு தொற்றுகள், நேரடியாக மனிதர்களுக்கு பரவுவது இல்லை. இந்த புழுவின் முட்டைகள் எலியின் கல்லீரலில் உருவாகிறது. ஆனால் அதன் மலத்தின் வழியே வெளியேறாது.

இறந்து போன எலிகளை சாப்பிடும் பூனைகள், நாய்கள் அல்லது பாம்புகள் வழியாக அந்த முட்டை மண்ணில் கலக்கிறது. பிறகு மண்ணில் இருந்து மனிதர்களுக்கு தொற்றுகிறது. அவ்வாறு மனித உடலில் தொற்றிக் கொள்ளும் இந்த புழுவின் முட்டைகள் மனிதர்களின் கல்லீரலில் சென்று குடியேறி விடுகிறது. இதனால் கல்லீரல் அழற்சி, கல்லீரல் பெரிதாகுவது, காய்ச்சல், சோர்வு வரை ஏற்படும். சிலருக்கு கல்லீரல் செயலிழப்பு வரை ஏற்படும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

இந்த மாதிரி தொற்று உலக அளவில் 175 பேருக்கு இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அதில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர்.

இந்த நோயை கண்டறிவதும் சவாலானது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள. ஏனெனில் கல்லீரலில் இருந்து ‘பயாப்சி’ எடுத்துதான் இதை உறுதிப்படுத்த முடியும். மற்ற எலிகள் மூலம் பரவும் வேறு தொற்றுக்களோடும் இந்த தொற்றை குழப்ப வாய்ப்பு இருப்பதால் கண்டுபிடிப்பதிலும், உறுதிப்படுத்துவதிலும் கூடுதல் கவனம் தேவை என்கிறார்கள்.

ஆரம்ப நிலைகளில் எந்தவிதமான அறிகுறிகளும் தெரியாமல் இருக்கலாம். தொற்று ஏற்பட்ட சில வாரங்களுக்கு பிறகோ, சில மாதங்களுக்கு பிறகோ கூட அறிகுறிகள் தோன்றலாம். அது உடலில் இருக்கும் முட்டைகளின் எண்ணிக்கையை பொறுத்தது.

பொதுவான அறிகுறியாக காய்ச்சல், வயிற்று வலி, கல்லீரல் பருமன் போன்றவை ஏற்படலாம். கண்டுபிடிக்காமல் விட்டால் கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டு மரணத்துக்கும் வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles