தெற்குக்கு மாகாண சபைகள் அவசியமற்றதாக இருக்கலாம். ஆனால், ஒரு சமஷ்டி அரசமைப்பு உருவாக்கப்படும் வரை அல்லது அரசமைப்பு திருத்தங்கள் ஊடாக வட, கிழக்கு மக்களுக்கான சுயாட்சி உறுதிப்படுத்தப்படும் வரை மாகாண சபைகள் முறைமை நிச்சயமாக நடைமுறையில் இருக்கவேண்டும் இவ்வாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு மாகாண சபைகள் முறைமை பொருத்தமில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர கூறியமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பெருவர்த்தகருமான திலித் ஜயவீரவை நான் பெரிதும் மதிக்கிறேன். அவர் அண்மைய காலத்திலேயே அரசியலுக்குள் பிரவேசித்தார். அதுமாத்திரமன்றி அவர் ஒரு தேசியவாதி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நாம் எமது மக்கள் குறித்து அதிகம் சிந்திப்பதைப் போன்று, அவர் அவரது மக்கள் குறித்து அதிகம் சிந்திக்கிறார்.

இருப்பினும், அவரின் சிங்கள தேசியவாதமும் எமது தமிழ்த் தேசியவாதத்தைப் போன்றதே என்பதை ஏற்க அவர் மறந்துவிட்டார். தனது சிங்கள மக்களுக்காக சிந்திக்கும் உரிமை அவருக்கு உண்டு. இருப்பினும், இந்த ஒட்டுமொத்த நாடும் சிங்கள மக்களால் சூழ்ந்ததல்ல. இலங்கையில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னரேயே வட, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த மக்கள் தமிழ் மொழியையே பேசினர். இந்நாட்டில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்மொழி பேசும் மக்கள் வாழ்ந்துவருவதாக பேராசிரியர் இந்திரபாலா கூறுகிறார்.

இலங்கைக்கு மாகாண சபைகள் முறைமை பொருத்தமானதன்று என திலித் ஜயவீர கூறுவாராயின், இலங்கையில் அத்தகையதோர் மாற்றத்தைத் தோற்றுவிப்பதற்குத் தூண்டுதலாக அமைந்த அடிப்படைக் காரணிகள் குறித்து அவர் அறியவில்லை என்றே கருதவேண்டியிருக்கிறது – என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here