Monday, February 2, 2026
HomeMain NewsAmericaபிரித்தானியா உட்பட எட்டு நாடுகள் மீது தண்டனை வரி - ட்ரம்ப் அறிவிப்பு

பிரித்தானியா உட்பட எட்டு நாடுகள் மீது தண்டனை வரி – ட்ரம்ப் அறிவிப்பு

கிறீன்லாந்தை விலைக்கு வாங்குவதற்குத் தடையாக நிற்கின்ற ஜரோப்பிய நாடுகள் மீது தண்டனை வரி விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

தனது சமூக ஊடகத் தளத்தில் இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் –
கிறீன்லாந்தை விலைக்கு வாங்கும் திட்டம் முற்றுப் பெறும் வரை பிரிட்டன், பிரான்ஸ், டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன், நோர்வே, ஜேர்மனி, பின்லாந்து ஆகிய எட்டு நாடுகள் மீதும் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் பத்து சதவீத சுங்க வரி விதிக்கப்படுகிறது. அது ஜூன் முதலாம் திகதி 25 சத வீதமாக உயர்த்தப்படும்.

கிறீன்லாந்தை முழுமையாகக் கையகப்படுத்துவதற்காக அதனை விலைபேசி வாங்கும் உடன்பாடு ஒன்று முழுமையாக எட்டப்படும் வரை இந்த எட்டு நாடுகள் மீதும் சுங்க வரி நீடிக்கும் என்று அவர் விவரித்துள்ளார்.
“இந்த எட்டு ஐரோப்பிய நாடுகளும் ஏன் என்று தெரியாத ஒரு நோக்கத்திற்காகக் கிறீன்லாந்திற்குச் சென்றுள்ளன”

“நமது புவிக் கிரகத்தின் பாதுகாப்பு மற்றும் உயிர்வாழ்விற்கு இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை. இவ்வாறு ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டுள்ள இந்த எட்டு நாடுகளும் , ஏற்றுக்கொள்ள முடியாததும் மற்றும் நீடிக்க முடியாததுமான பெரும் ஆபத்தைக் கையில் எடுத்துள்ளன,” – என்று ட்ரம்ப் தனது “ட்ருத்” சமூக ஊடகத்தில் எழுதியுள்ளார் .
அதிபர் ட்ரம்பின் இந்த விடாப்பிடியான நிலைப்பாடு அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.

அமெரிக்காவின் இந்த சுங்க வரி விதிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பிரான்ஸின் அதிபர் எமானுவல் மக்ரோன் உடனடியாகக் கருத்து வெளியிட்டிருக்கிறார்.

“உலகின் மற்ற இடங்களைப் போலவே ஐரோப்பாவிலும் நாடுகளின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பேணுவதற்குப் பிரான்ஸ் உறுதிபூண்டுள்ளது. இதுவே எங்கள் முடிவுகளை வழிநடத்துகிறது. இது ஐக்கிய நாடுகள் சபையினதும் மற்றும் எமது சாசனங்கள் மீதும் உள்ள எங்கள் உறுதிப்பாட்டை அடித்தளமாகக் கொண்டது”

” கிறீன்லாந்துக்கான எங்கள் ஆதரவைக் காரணங்காட்டி நம்மை மிரட்டியோ அச்சுறுத்தியோ எங்களது நிலைப்பாட்டில் தாக்கம் செலுத்திவிட முடியாது” – என்று மக்ரோன் தெளிவாகக் கூறியுள்ளார்.

இதேவேளை – டென்மார்க் தலைநகர் கொப்பனேஹனில் நேற்று சனிக்கிழமை திரண்ட பல்லாயிரக்கணக்கான டெனிஷ் மக்கள் கிறீன்லாந்தை ஆக்கிரமிக்க அமெரிக்க நிர்வாகம் எடுத்துள்ள முயற்சிகளுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கிறீன்லாந்து தலைநகரிலும் இதேபோன்ற ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

அதிபர் ட்ரம்ப் கிறீன்லாந்தை அதன் கேந்திர முக்கியத்துவம் மற்றும் கனிய வளச் செறிவு என்பவற்றுக்காக அமெரிக்காவுடன் இணைப்பதற்கு முயன்று வருகிறார். அதற்கான ஒரு தெரிவாக இராணுவ பலத்தைப் பயன்படுத்துவேன் என்ற மிரட்டலையும் வெளியிட்டுள்ளார். அதனால் நேட்டோ கூட்டணிக்குள் பெரும் குழப்ப நிலை தோன்றியுள்ளது. டென்மார்க்கின் ஆளுகைக்குட்பட்ட ஒரு தன்னாட்சிப் பகுதியாகிய கிறீன்லாந்துத் தீவைப் பாதுகாப்பதற்காக பிரான்ஸ் உட்பட மேற்கண்ட எட்டு ஐரோப்பிய நாடுகளும் தமது படையினரை அங்கே நகர்த்தத் தொடங்கியுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular