Monday, February 2, 2026
HomeMain Newsஅரசமைப்பு பேரவையிலிருந்து சிறீதரன் பதவி விலகவேண்டும் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து

அரசமைப்பு பேரவையிலிருந்து சிறீதரன் பதவி விலகவேண்டும் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து

அரசமைப்பு பேரவையில் சிறுபான்மை அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறீதரன் எம். பி. அரசாங்கத்துக்கு சார்பாக செயல்படுகிறார். இராணுவ அதிகாரிகளின் நியமனத்துக்கும் இணக்கம் தெரிவித்து வடக்கு மக்களின் உரிமைகளை அவமதித்துள்ளார். ஆகவே, அரசமைப்பு பேரவையிலிருந்து சிறீதரன் உடன் பதவி விலக வேண்டும் – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், 1988 ஆம் ஆண்டு முதல் சகல கல்வி மறுசீரமைப்புத் திட்டங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இன்று கல்வி மறுசீரமைப்பு மற்றும் கல்வி கொள்கை தொடர்பான வெள்ளை அறிக்கை பற்றி பேசுகிறார்கள். கல்வி மறுசீரமைப்பில் வெளிப்படையாக செயற்பட வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் கடந்த அ ரசாங்கம் கொண்டு வந்த கல்வி மறுசீரமைப்புக்கு கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரிணி அமரசூரிய ஆதரவளிக்கவில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு சென்று இனவாதத்தை தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார். இது முற்றிலும் தவறானது. பிரபாகரன் அவ்வாறு பேசியிருந்தால் அதனை கவனத்தில் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், நாட்டின் ஜனாதிபதி எப்படி இவ்வாறு பேச முடியும். சிங்கள – பௌத்தர்கள்மீது ஜனாதிபதிக்கு அப்படி என்ன கோபம் என்று தெரியவில்லை. சிங்கள – பௌத்த மக்களை அரசாங்கம் பழி வாங்குகிறது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் சிறுபான்மை அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி அரசமைப்பு பேரவையின் உறுப்பினராக பதவி வகிக்கிறார். அரசாங்கம் கொண்டு வந்த தவறான நியமனங்களுக்கு சிறீதரன் அரசமைப்பு பேரவையில் ஆதரவளித்துள்ளார். அரசாங்கம் கொண்டு வரும் அனைத்து முன்மொழிவுகளுக்கும் இவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

சிறீதரனின் செயல்பாடுகள் பெரும் பிரச்னையாக காணப்படுகிறது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நியமனத்துக்கும் ஆதரவளித்துள்ளார். பாராளுமன்ற ஒழுக்கக் கோவையின் பிரகாரம் இவர் விடயங்களை பாராளுமன்றத்துக்கு தெளிவுபடுத்தவில்லை. இவருக்கு எதிராக தற்போது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பூநகரி புதுப்பிக்கத்தக்க சக்தி வலு திட்டம் தொடர்பில் சிறீதரன், சிறீதரன் சாரங்கன் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. அரசமைப்பு பேரவையில் இருந்து விலகுமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சிறீதரனுக்கு அறிவுறுத்தியுள்ளது, ஆனால், அவர் பதவி விலகவில்லை.

சிறுபான்மை கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு அரசாங்கத்துக்கு சார்பாக செயல்படுவது சிறீதரனின் கடமை அல்ல. உண்மையில் இவர் சுய அடிப்படையில் பதவி விலக வேண்டும். இவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அரசாங்கத்துக்கு சார்பாக செயல்பட்டுக்கொண்டு தனது தனிப்பட்ட பிரச்னைகளை இவர் தீர்த்துக் கொள்கிறார். அதேபோல், வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொள்கிறார்.

வடக்கு மக்களின் உரிமைகளுக்கு எதிராகவும் சிறீதரன் செயல்பட்டுள்ளார். ஆகவே, சிறுபான்மை அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திக்கொண்டு அரசமைப்பு பேரவையில் பதவி வகிக்க சிறீதரனுக்கு எவ்வித தகுதியும் கிடையாது. ஆகவே, அவர் உடன் பதவி விலக வேண்டும் – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular