அரசாங்க மருத்துவர்கள் போராட்டம்! நோயாளர்கள் பெரும் அசௌகரியம்!

கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

நாட்டிலுள்ள பல பிரதான வைத்தியசாலைகளில் இன்றைய தினம் அவசர மருத்துவ சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டன. வெளி நோயாளர் பிரிவு உள்ளிட்ட எந்த சேவைகளும் இடம்பெறவில்லை. இதனால் பெருமளவான மக்கள் வைத்தியசாலைகளுக்குச் சென்று அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

எவ்வாறிருப்பினும் சிறுவர் வைத்தியசாலைகள், மகப்பேற்று வைத்தியசாலைகள், புற்றுநோய் சிகிச்சைகள், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், முப்படை வைத்தியசாலைகள் மற்றும் அங்கொட தேசிய மனநல வைத்தியசாலை என்பவற்றில் வேலை நிறுத்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை.

எவ்வாறிருப்பினும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இந்த வேலை நிறுத்த போராட்டம் நியாயமற்றது என சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.

‘மருத்துவர்களில் சிறு பிரிவினரே இவ்வாறு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெரும்பாலான வைத்தியசாலைகளில் விடுதிகளில் சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படுகின்றன. இது உண்மையில் நியாயமற்றதொரு போராட்டமாகும். சுகாதாரத்துறை சார்ந்த எந்தவொரு வேலை நிறுத்த போராட்டத்தையும் நியாயப்படுத்த முடியாது.
எனவே இவ்வாறான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதை தடுப்பதற்பு ஆட்சியாளர்கள் என்ற ரீதியில் எமக்கும் பொறுப்பிருக்கிறது. அதேபோன்று தொழிற்சங்கங்களுக்கும் அந்த பொறுப்பிருக்கிறது. இந்த வேலை நிறுத்தத்துக்காக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நியாயமற்றவையாகும்.

வரவு – செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் இந்த நாளிலேயே வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். எனவே தான் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது நியாயமற்றது எனக் கூறுகின்றோம்.

கொடுப்பனவு மாத்திரமின்றி விசேட வைத்திய நிபுணர்களுக்கான புதிய சேவை யாப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது நீண்டகாலமாக முன்னெடுக்கப்படாமலிருக்கும் ஒரு செயற்பாடாகும். அதனை புதுப்பிக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

விசேட வைத்திய நிபுணர்களில் 95 வீதத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டு அவர்களுக்கென பிரத்தியேக சேவை யாப்பொன்று வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் ஆராய்ந்த குழுவும் அந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது.

அந்த பரிந்துரைகளிலுள்ள தொழிநுட்ப காரணிகள் குறித்து ஆராய்வதற்காக சகல தொழிற்சங்க உறுப்பினர்களையும் உள்ளடக்கிய குழுவொன்றும் நியமிக்கப்படும். அந்த குழுவின் தொழிற்சங்கங்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்க முடியும். எனவே சாதாரண மக்களின் உயிருடன் தொடர்புடைய காரணிகள் குறித்து இதை விட பரந்துபட்டளவில் சிந்தித்து தீர்மானங்களை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.’ என்று சுகாதார பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் தமக்கு ஸ்திரமான பதில் வழங்கப்படாவிட்டால் திட்டமிட்ட படி வேலை நிறுத்தத்தை தொடர்வோம் என்றும், இதனால் பொது மக்கள் எதிர்கொண்டுள்ள அசௌகரியங்களுக்கு அரசாங்கமும் சுகாதார அமைச்சரும் பொறுப்பேற்கவேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles