சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்ட உடன்படிக்கையில் எந்தவித மாற்றங்களுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
டித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.
இலங்கை பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்து வரும்வேளையில் இவ்வாறானதோர் அனர்த்தம் ஏற்பட்டமை குறித்து தமது வருத்தத்தைத் தெரிவித்த நாணய பிரதிநிதிகள், சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் அரசாங்கம் எடுத்த விரைவான நடவடிக்கைகளைப் பாராட்டினர். அரசாங்கம் அனர்த்தத்தை கையாண்ட விதம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், கடந்த ஆண்டில் அரசாங்கம் கடைப்பிடித்த உயர் நிதி ஒழுக்கமானது இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கு முக்கிய காரணியாக அமைந்ததாக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
திறைசேரியில் மேலதிக உபரி நிதி காணப்பட்டதன் காரணமாகவே, அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக 50 ஆயிரம் கோடி ரூபாய் மேலதிக மதிப்பீட்டை முன்வைக்க அரசாங்கத்தால் முடிந்ததாகக் குறிப்பிட்டு அதனைப் பெரிதும் பாராட்டினர்.
இலங்கை தற்போது சரியான பொருளாதார பாதையில் பயணிப்பதாகத் தெரிவித்த சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் 6ஆவது தவணையை வழங்குவது தொடர்பான பேச்சுகள் எதிர்வரும் மார்ச் மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டனர்.
இதன்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இந்த அனர்த்தத்தால் வறுமையில் வாழும் கிராமப்புற மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்றும் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கிராமிய உட்கட்டமைப்புகள் சீர்குலைந்தன எனவும் சுட்டிக்காட்டினார். கிராமப்புற மக்களின் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பவே இந்த 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாக அவர் விளக்கமளித்தார்.
இந்த நடவடிக்கை எந்தக் காரணம் கொண்டும் முறையான நிதி முகாமைத்துவத்திலிருந்து விலகிச் செல்லும் பொறுப்பற்ற செயல் அல்ல, புள்ளிவிபரங்களின் மூலமான பொருளாதார வெற்றிகள் உண்மையாகவே சாதாரண மக்களைச் சென்றடையச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும்இ நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்ட உடன்படிக்கையில் எவ்வித மாற்றங்களும் இன்றி, அதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல இரு தரப்பினரும் இதன்போது உடன்பட்டனர் – என்று தெரிவிக்கப்பட்டது.

















