யானைக்கு அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கியவரும் அவரை காப்பாற்ற முயன்றவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு – ஏறாவூர்பற்று- பன்குடாவெளி – புலையவெளியில் இடம்பெற்றுள்ளது.
இதில் அதே இடத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான செல்வம் கர்ணன் (வயது 48), 4 பிள்ளைகளின் தமிழ்ச்செல்வி செல்வகுமார் (வயது 43) ஆகியோரே உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருபவை வருமாறு,
உயிரிழந்த பெண்ணும் உயிரிழந்தவரின் மனைவியும் மீன் வாங்குவதற்காக புலையவெளி ஆற்றுக்கு சென்றபோது வயல் பகுதியில் நில மட்டத்தில் யானைக்காக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கினர். இதன்போது, மின்சாரத்தால் தாக்குண்டதில் உயிரிழந்த பெண் தண்ணீரிலும் மற்றைய பெண் நிலப் பகுதியிலும் விழுந்தனர்.
தண்ணீரில் விழுந்த பெண்ணை காப்பாற்றுவதற்காக நிலப் பகுதியில் விழுந்த பெண் தனது கணவரை அழைத்துள்ளார். அவரும் தண்ணீருக்குள் இறங்க முயன்றபோது மின்சாரம் தாக்கியது. அங்கு வந்த அயலவர்கள் மின்சார வேலிக்கு வழங்கிய மின்சாரத்தை துண்டித்து இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர்.
இருவரின் சடலங்களும் செங்கலடி பிரதேச மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டன. கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
