முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை எதிர்வரும் 3ஆம் திகதி பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம் அளிப்பதற்காக ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு முன்னதாக 27 ஆம் திகதி பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அன்றைய தினம் தான் ஆஜராக முடியாது என்றும், அதற்காக 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் அவர் தனது வழக்கறிஞர் மூலம் பொலிஸாருக்குத் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படாததால், பெப்ரவரி 3 ஆம் திகதி மீண்டும் பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவில் ஆஜராகுமாறு ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவையும் 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவர் நாட்டில் இல்லாததால், அதற்காக வேறு திகதியை வழங்குமாறு செய்யப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
