Saturday, February 7, 2026
HomeMain News‘‘உலகுக்கான இந்தியாவின் கொடையே தமிழ் மொழி!’’ - மலேசியாவில் பிரதமர் மோடி

‘‘உலகுக்கான இந்தியாவின் கொடையே தமிழ் மொழி!’’ – மலேசியாவில் பிரதமர் மோடி

உலகுக்கான இந்தியாவின் கொடை தமிழ் மொழி என்றும் தமிழ் இலக்கியம் நித்தியமானது என்றும் தமிழ் பண்பாடு உலகளாவியது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மலேசியா சென்றுள்ளார். தலைநகர் கோலாலம்பூரில் பிரதமர் மோடியை விமான நிலையத்துக்கே வந்து அன்வர் இப்ராஹிம் வரவேற்றார். இதையடுத்து, பிரதமர் மோடி பங்கேற்க இருந்த சமூக நிகழ்ச்சிக்கு அவரை தனது காரிலேயே அழைத்துச் சென்றார்.

இந்திய வம்சாவளியினர் பெருமளவில் பங்கேற்ற சமூக நிகழ்ச்சியில் உரையாற்றிய அன்வர் இப்ராஹிம், ‘‘உங்கள் போராட்டத்தை நான் பின்தொடர்ந்து வருகிறேன். மோடியின் தனிப்பட்ட நண்பராக நான் இருப்பதை பாக்கியமாகக் கருதுகிறேன்’’ என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வணக்கம் என்று கூறி அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து பேசிய அவர், ‘‘இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான தொடர்பு இதயப்பூர்வமானது. உலகில் இந்திய வம்சாவளியினர் அதிகம் இருக்கும் இரண்டாவது நாடு மலேசியா. இந்தியாவையும் மலேசியாவையும் இணைக்கும் விஷயங்கள் பல உள்ளன. இங்குள்ள நீங்கள் இரு நாடுகளையும் இணைக்கும் உயிருள்ள பாலமாக இருக்கிறீர்கள். நம் மொழிகளில் நாம் பகிரும் பல வார்த்தைகளில் நாம் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்கிறோம்.

மலேசியாவில் இந்திய இசை மிகவும் பிரபலம் என்று கேள்விப்பட்டேன். மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் மிகச் சிறப்பாக பாடுவார். பல இந்தியர்களுக்கு இது தெரியாது. அவரது பாடல்கள் இந்தியாவில் வைரலாகின. அவருக்கு தமிழ் இசையில் ஆழ்ந்த ஆர்வம் உள்ளது என்பதை அறிந்து நான் மிகழ்ந்தேன். மலேசியாவில் உள்ள நேதாஜி சேவை மையம் மற்றும் நேதாஜி நல அறக்கட்டளையின் முயற்சிகளுக்கு வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

பல நூற்றாண்டுகளாக நீங்கள் இந்திய மரபுகளை பாதுகாத்து வருவது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் பணி குறித்து நான் பேசினேன். மலேசியாவில் 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் இந்திய மொழிகளில் கல்வி கற்பிக்கின்றன என்பதை கூறினேன். இந்தியாவின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் வந்த மக்களும் அவர்களின் வழித்தோன்றல்களும் இங்கே இருக்கிறீர்கள். பண்பாட்டு ஒற்றுமை என்ற நூல் நம்மை வலுவாகப் பிணைக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற நமது புரிதலில்தான் நமது வலிமை அடங்கியுள்ளது.

தமிழ் மொழி, உலகுக்கான இந்தியாவின் கொடை. தமிழ் இலக்கியம் நித்தியமானது, தமிழ் நண்பாடு உலகளாவியது. தமிழர்கள் தங்கள் திறமைகளால் மனித குலத்துக்கு சேவை செய்கின்றனர். நாம் ஒருவருக்கு ஒருவர் வெற்றிகளைக் கொண்டாடுகிறோம். சந்திராயன்-2 திட்டத்தின் வெற்றிக்கு பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தபோது நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். இந்தியாவின் வெற்றி மலேசியாவின் வெற்றி. இது ஆசியாவின் வெற்றி.

இந்தியாவின் யுபிஐ விரைவில் மலேசியாவுக்கு வர இருக்கிறது என்பதை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு வருகை தருமாறு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். கடந்த சில ஆண்டுகளில் இந்தியா உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு வசதிகளில் முன் எப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டுள்ளது. வந்தே பாரத் போன்ற நவீன ரயில்கள் சர்வதேச அளவில் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன. நீங்கள் பயணம் செய்து நம்ப முடியாத இந்தியாவை அனுபவிக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா ஒரு பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தியா 11வது பெரிய பொருளாதாரமாக இருந்தது. இப்போது, முதல் மூன்று இடங்களை நோக்கி முன்னேறி வருகிறோம். நாம் உலகின் வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரமாக இருக்கிறோம். இந்தியாவில் தயாரிப்போம் என்பது அப்போதுதான் நடப்பட்ட ஒரு இளம் செடியாக இருந்தது. இப்போது, இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் தயாரிப்பு நாடாக உள்ளது’’ என தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular