Monday, February 9, 2026
HomeMain Newsரி20 உலகக் கிண்ணம்: அயலாந்தை வீழ்தியது இலங்கை அணி!

ரி20 உலகக் கிண்ணம்: அயலாந்தை வீழ்தியது இலங்கை அணி!

அயர்லாந்துக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஐசிசி ரி20 உலகக் கிண்ண பி குழுவுக்கான தனது ஆரம்பப் போட்டியில் இலங்கை 20 ஓட்டங்களால் வெற்றிபெற்று உலகக் கிண்ணத்தில் தனது வெற்றிக்கணக்கை ஆரம்பித்தது.

கமிந்து மெண்டிஸின் அதுடுப்பாட்டம், குசல் மெண்டிஸின் பொறுமையான அரைச் சதம், மகேஷ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் அயர்லாந்துக்கு எதிராக இலங்கை ஈட்டிய நான்காவது நேரடியான வெற்றி இதுவாகும்.

உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாத்தில் கடைசி நேரத்தில் அழைக்கப்பட்ட கமிந்து மெண்டிஸின் அதிரடி ஆட்டம் இலங்கை அணிக்கு உற்சாகத்தை கொடுத்ததுடன் வெற்றிக்கும் வித்திட்டது.

“உலகக் கிண்ணத்திற்கு நான் கடைசி நேரம் அழைக்கப்பட்டிருந்தாலும் தெரிவாளர்களே அந்தத் தீர்மானத்தை எடுத்தனர். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எனது முழுமையான பங்களிப்பை வழங்கி அணியை வெற்றிபெறச் செய்வது எனது குறிக்கோள். இன்றைய தினமும் அதனைத் தான் செய்தேன். அதேவேளை குசல் மெண்டிஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடியதுடன் தீக்ஷன, வனிந்து ஆகியோர் மிகவும் அவசியமான நேரத்தில் விக்கெட்களை சரித்தனர். எல்லா பாராட்டுகளும் அவர்களுக்கே உரியது” என போட்டி முடிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கமிந்து மெண்டிஸ் தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.

முன்வரிசை வீரர்கள் பிரகாசிக்கத் தவறியதால் இலங்கை அணி 14ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களையே பெற்றிருந்தது.

காமில் மிஷார (14), பெத்தும் நிஸ்ஸன்க (24), பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பவன் ரத்நாயக்க (5), துனித் வெல்லாலகே (10) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

அதனைத் தொடர்ந்து 6ஆம் இலக்க வீரராக கமிந்து மெண்டிஸ் களம் நுழைந்த பின்னரே இலங்கை அணியின் ஆக்ரோஷம் வெளிப்பட்டது.

பவர் ப்ளேயின் கடைசிப் பந்தில் பவுண்டறி அடித்த இலங்கை அடுத்த 53ஆவது பந்திலேயே பவுண்டறி அடித்தது. அதுவரை பவுண்டறிகள் இலங்கைக்கு வராத நிலையில் அந்த பவுண்டறியை கமிந்து மெண்டிஸ் அடித்தார்.

தொடர்ந்து அதிரடியில் இறங்கிய கமிந்து மெண்டிஸ் 19 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 44 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரும் குசல் மெண்டிஸும் 5ஆவது விக்கெட்டில் 29 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

குசல் மெண்டிஸ் 43 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள் உட்பட 56 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஜோர்ஜ் டொக்ரெல் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பெறி மெக்காத்தி 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

மொத்த எண்ணிக்கை 24 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரரும் அணித் தலைவருமான போல் ஸ்டேர்லிங் (6) ஆட்டம் இழந்தார்.

மறுபக்கத்தில் திறமையாக துடுப்பெடுத்தாடிய மற்றைய ஆரம்ப வீரர் மார்க் அடயார் 34 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார்.

அடுத்து ஜோடி சேர்ந்த ஹெரி டெக்டர், லோர்க்கன் டக்கர் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது துனித் வெல்லாலகேயின் பந்துவீச்சில் லோக்கன் டக்கர் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஹெரி டெக்டரின் விக்கெட்டை வனிந்து ஹசரங்க வீழ்த்தினார். ஹெரி டெக்டர் 40 ஓட்டங்களைப் பெற்றார்.

மொத்த எண்ணிக்கை 120 ஓட்டங்களாக இருந்தபோது பென் காலிட்ஸ் (1), கெரத் டிலேனி (0), ஆகிய இருவரின் விக்கெட்களை மகேஷ் தீக்ஷன அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழக்கச் செய்து இலங்கைக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார்.

எட்டாவது ஓவரில் அடயாரின் விக்கெட்டைக் கைபற்றிய வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக சில ஓவர்கள் ஓய்வுபெற்றார். அவர் மீண்டும் களம் திரும்பி 2 ஒவர்களுக்கு பின்னர் 15ஆவது ஓவரில் முதல் பந்தில் மேலும் ஒரு விக்கெட்டையும் கடைசி ஓவரில் 3ஆவது விக்கெட்டை யும் கைபற்றினார்.

அதனைத் தொடர்ந்து எஞ்சிய 3 விக்கெட்களை துஷ்மன்த சமீர, மதீஷ பத்திரண ஆகியோர் கைப்பற்றி இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular