வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து பெப்ரவரி 20இல் வெளியாகிறது ஜனநாயகன்?

த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9ஆம் திகதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கை மீண்டும் முதலில் இருந்து முழுமையாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இந்த சூழலில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ், தணிக்கை வாரியத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான சிக்கலைத் தீர்க்க, திரைப்படத்தைத் தணிக்கை வாரியத்தின் சீராய்வு குழுவின் பார்வைக்கு அனுப்பவும் படக்குழு தீர்மானித்துள்ளது.

இந்தத் திரைப்படம் ஜனவரி 9ஆம் திகதியே வெளியாக வேண்டியிருந்தது. ஆனால், தணிக்கை வாரியத்தின் ஆய்வுக் குழு பரிந்துரைத்த 27 மாற்றங்களைச் செய்த பிறகும் சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை படக்குழு சட்டப் போராட்டம் நடத்தியது.

இருப்பினும், சட்ட ரீதியான நடவடிக்கைகளில் உடனடி தீர்வு கிடைக்காததாலும், படத்தின் ஓடிடி உரிமத்தைப் பெற்றுள்ள அமேசான் ப்ரைம் நிறுவனத்தின் அழுத்தம் காரணமாகவும் இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பே படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தால், அரசியல் வசனங்கள் நிறைந்த இந்தப் படம் தேர்தல் ஆணையத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

தற்போது சீராய்வு குழு இந்தப் படத்துக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், வரும் பெப்ரவரி 20ஆம் திகதி ‘ஜனநாயகன்’ படத்தை உலகம் முழுவதும் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னதாக வெளியாகும் இந்தப் படம், அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles