Monday, February 16, 2026
HomeMain Newsஆஸியை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை அணி

ஆஸியை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை அணி

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் 30ஆவது லீக் போட்டியில், அவுஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி உத்தியோகபூர்வமாக ‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்த ட்ராவிஸ் ஹெட் 29 பந்துகளில் 56 ஓட்டங்களையும், அணித்தலைவர் மிட்செல் மார்ஷ் 27 பந்துகளில் 54 ஓட்டங்களையும் விளாசினர்.

இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்காகப் பலமான அடித்தளமிட்ட போதிலும், இலங்கைச் சுழற்பந்து வீச்சாளர்கள் போட்டியின் மத்திய பகுதியில் ஆட்டத்தைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

குறிப்பாக, மத்திய வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், அந்த அணியால் 200 ஓட்டங்களைக் கடக்க முடியாமல் போனது. ஜோஷ் இங்கிலிஸ் 27 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் துஷான் ஹேமந்த 3 விக்கெட்டுகளையும், வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண 0.4 ஓவர்கள் வீசிய நிலையில் உபாதை காரணமாக வெளியேறியது அணிக்குப் பின்னடைவாக அமைந்தது.

பின்னர், 182 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 18 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய தொடக்க ஆட்டக்காரர் பெத்தும் நிஸ்ஸங்க 52 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவரே ஆட்டநாயகனாக தெரிவானார்.

அவருக்குச் சிறந்த ஒத்துழைப்பை வழங்கிய குசல் மெந்திஸ் 51 ஓட்டங்களைப் பெற்றார். இளம் வீரர் பவன் ரத்நாயக்க ஆட்டமிழக்காது 28 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை நிறைவு செய்தார்.

இந்த வெற்றியுடன் ‘குரூப் B’ பிரிவில் இருந்து இலங்கை அணி அடுத்த சுற்றான ‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular