யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனான் அயூப்ராஜ் அருள்பயஸூக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சிறுவன் கடந்த 10ஆம் திகதி அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிசாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அதற்கு நீதி வேண்டியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மனித உரிமைகள் ஆர்வலர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தவத்திரு வேலன் சுவாமிகள், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன், யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், கொலை செய்யப்பட்ட சிறுவனின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு, “கொலைகார பொலிஸாராரை கைது செய், நீதி வேண்டும், பொலிஸாரிடமிருந்து மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தை அச்சுறுத்தாதே, பொலிஸ் அராஜகம் ஒழிக” கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

















