மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்தில் வழிபாடுகளுக்கு இராணுவத்தினர் தடை!

மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு, இராணுவத்தால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.

மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தில் வருடாந்த திருவிழாத் திருப்பலியை கடந்த 2ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதற்கு அரசாங்கத்திடமும் இராணுவத்திடமும் அனுமதி கோரி மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத்தின் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உள்ளிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட பகுதியைப் பார்வையிட்டதுடன், அங்கு வழிபாடுகளை நடத்த அனுமதிக்குமாறு இராணுவத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆனால், வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இராணுவத்தால் தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்த வருட திருவிழாத் திருப்பலி இடம்பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், ஆளுநருக்கும், அமைச்சர் சந்திரசேகருக்கும், மாவட்ட செயலருக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும் இராணுவத்தின் நடவடிக்கையில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்தில் திருவிழா வழிபாடுகளை மேற்கொள்வதற்கு யாழ். மறை மாவட்டமும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதன்போது, ஆலயத்துக்குள் வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என்றும், ஆலய வளாகத்துக்கு வெளியில் வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிப்பதாகவும் இராணுவத்தால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறான முறையில் வழிபாட்டை மேற்கொள்வதற்கு யாழ். ஆயர் இல்லம் மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்தின் இந்த வருட திருவிழா தடைப்பட்டுள்ளது. இதையடுத்து, இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles