ஜப்பானில் உள்ள ஓர் உயிரியல் பூங்காவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மக்காவ் வகை குரங்கு குட்டிகளை ஈன்றது. இதில் ஒரு குட்டியை மட்டும் அந்த தாய் குரங்கு விரட்டியது.
உயிரியல் பூங்கா நிர்வாகிகள் அந்தக் குட்டிக் குரங்குக்கு தனியிடத்தை ஏற்பாடு செய்து அது விளையாடி மகிழ உர்ராங் உடான் வகை குரங்கு பொம்மையைக் கொடுத்தனர். இந்தக் குரங்குக் குட்டிக்கு `பஞ்ச்’ என்று பெயர் வைத்தனர். அந்த பொம்மையுடன் குட்டிக் குரங்கு விளையாடி வந்தது. இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
குட்டி குரங்குக்கு ஆதரவாக சோஷியல் மீடியாக்களில் பலரும் குரல் கொடுத்தனர். மக்காவ் குரங்குகள் மிகவும் புத்தி கூர்மையானவை. பனி பிரதேசத்தில் வாழும் இவை, உணவுகளை கழுவி உண்ணவும், உப்பு சுவைக்காக கடல் நீரை சேர்த்துக்கொள்ளவும் தெரிந்து வைத்துள்ளன. மனிதர்களை போல உடலை சூடாக வைத்துக்கொள்ள வெந்நீர் தொட்டிகளில் இவை குளிக்கின்றன.
தற்போது 7 மாதமாகும் இந்த குரங்குக் குட்டியை, பார்க்க பொதுமக்கள் அதிக அளவில் பூங்காவுக்கு வருகின்றனர். இது குறித்து உயிரியல் பூங்கா காப்பாளர் கோசுக்கே ஷிகானோ கூறும்போது, “பஞ்ச் குரங்குக்குட்டிக்கு இப்போது ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். உர்ராங் உடான் குரங்கு பொம்மையுடன் பஞ்ச் விளையாடி வருகிறது. பிற்காலத்தில் இது தனது இனத்தோடு சேர்ந்து வாழ இந்த பொம்மை உதவும்” என்றார்.
குரங்குக்குட்டியை வாங்குவதற்கு பிரபல தொழிலதிபர் டிரிஸ்டன் டேட் முன்வந்துள்ளார். இதற்காக 25 ஆயிரம் டொலர் தரவும் அவர் முன்வந்தார். இதை தனது எக்ஸ் தள பக்கத்திலும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளரும், தொழிலதிபருமான எமோரி ஆண்ட்ரூ டேட்டின் தம்பிதான் இந்த டிரிஸ்டன் டேட்.
இந்நிலையில் குட்டிக்குரங்கு பஞ்ச் தனது குரங்குக் கூட்டத்துடன் மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. குரங்குக் கூட்டத்தில் உள்ள குரங்குகளுடன் அது இணைந்து விளையாடி வருகிறது. பஞ்ச் குரங்குக் குட்டியை, குரங்குகள் கூட்டம் ஏற்றுக் கொண்டு அரவணைத்துக் கொண்டுள்ளன. இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன.

















