#image_title

மிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்ற கழகத்துடன் இணைந்து கொண்டார்.

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் என இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது.

தற்போது அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் வேகம் காட்டி வருகின்றன.

இப்படி அரசியல் களம் ஒருபக்கம் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம், கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.

கடந்த முறை தனியாக போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி இந்த சட்டசபை தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

இந்த கூட்டணியில் ஓ.பி.எஸ்.சையும் சேர்த்து கொள்ள முயற்சிகள் நடந்தது.

ஆனால் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்தை சேர்த்து கொள்ள தயாராக இல்லை.

இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் தொடர்பாக எந்தவொரு நிலையான முடிவையும் எடுக்காததால் அவருடன் பயணித்த மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், கு.ப.கிருஸ்ணன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் அவரை விட்டு விலகி மாற்றுக்கட்சிகளில் சேர்ந்து விட்டனர்.

இதனிடையே, தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் தை மாதத்திற்குள் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிப்பதாக கூறிவந்த ஓ.பன்னீர்செல்வம், என்னை முழுவதுமாக கட்சியில் இருந்து நீக்கியதற்கு என்ன காரணம் என்பதை தற்போது பொறுப்பில் உள்ளவர்கள் தெரிவிக்க வேண்டும்.

நான் தவறு செய்தேன் என்று தெரிந்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என்று நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.

அண்ணா அறிவாலயம் வந்த ஓ.பன்னீர்செல்வம், திராவிட முன்னேற்ற கழக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்துக்கொண்டார்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது ஆதரவாளர்களும் திராவிட முன்னேற்ற கழகத்துடன் இணைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here