யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளதால் மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும், செயற்கைத் தட்டுபாட்டை தவிர்க்குமாறும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
காங்கேசன்துறையிலுள்ள பெற்றோல் களஞ்சியத்திலிருந்து இன்று எரிபொருள் நிலையங்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, காங்கேசன்துறையிலுள்ள பெற்றோல் களஞ்சியமானது வழமையாக ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருப்பதால், இன்றைய தினம் (01.03.2026) களஞ்சியத்தைத் திறந்து எரிபொருள் நிலையங்களுக்கு பெற்றோல் விநியோகத்தை மேற்கொள்ளுமாறு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபனும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் டி.ஜே.ஏ.எஸ்.டி.எஸ்.ராஜகருணாவிடம் நேற்று இரவு கோரிக்கை முன்வைத்தார்கள்.
அதற்கமைவாக, பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவரின் அறிவுறுத்தலுக்கமைவாக – இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிலையங்களுக்கும் பெற்றோல் விநியோகிக்க வட பிராந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நாட்டுக்குத் தேவையான ஒரு மாதத்திற்கான பெற்றோல் கையிருப்பில் இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்தார் என அரசாங்க அதிபர் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.



