ஈரான் தாக்குதல் நடத்துமானால் இதற்கு முன் பார்த்திராத வகையில் பதிலடி – ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் கடும் தாக்குதலை நடத்துமானால் இதற்கு முன் பார்த்திராத ஒரு பெரும் சக்தியைக் கொண்டு நாங்கள் அவர்களைத் தாக்குவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடக பதிவில், ”இன்று ஈரான் மிகக் கடுமையாகத் தாக்கப் போவதாகவும், அது முந்தைய தாக்குதல்களைவிட மிகவும் வலிமையானதாக இருக்கும் என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது. அதை அவர்கள் செய்யாமல் இருப்பது நல்லது. ஒருவேளை அவர்கள் அவ்வாறு தாக்கினால், இதற்கு முன் பார்த்திராத ஒரு பெரும் சக்தியைக் கொண்டு நாங்கள் அவர்களைத் தாக்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அவர் வெளியிட்ட ஒரு சமூக ஊடக பதிவில் ஈரானின் மத தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அறிவித்தார். அவர் தனது பதிவில், “வரலாற்றின் மிக மோசமான மனிதர்களில் ஒருவரான கமேனி இன்று இறந்துவிட்டார். இது ஈரானிய மக்களுக்குக் கிடைத்த நீதி மட்டுமல்ல, கமேனியாலும் அவரது ரத்தவெறி பிடித்த குண்டர் கும்பலாலும் கொல்லப்பட்ட அல்லது சிதைக்கப்பட்ட பல நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும், சிறந்த அமெரிக்கர்களுக்கும் கிடைத்த நீதியாகும்.

எங்களுடைய உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. இஸ்ரேலுடன் இணைந்து நாங்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், அவரோ அல்லது அவருடன் சேர்ந்து கொல்லப்பட்ட மற்ற தலைவர்களோ தற்காத்துக் கொள்ள எதுவுமே செய்ய முடியவில்லை. ஈரானிய மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுப்பதற்கான ஒற்றைப் பெரும் வாய்ப்பு இதுவாகும்.

ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை, ராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த பலர் இனிப் போரிட விரும்பவில்லை என்றும், எங்களிடமிருந்து பாதுகாப்பை எதிர்பார்ப்பதாகவும் எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன. நான் ஏற்கெனவே சொன்னது போல, இப்போது சரணடைந்தால் அவர்களுக்குப் பாதுகாப்பு உண்டு, காலம் கடந்தால் அவர்களுக்கு மரணம் மட்டுமே மிஞ்சும்!

ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையும் காவல்துறையும் அமைதியான முறையில் ஈரான் தேசப்பற்றாளர்களுடன் இணைந்து, இந்த நாடு தகுதியுள்ள அந்தப் பெருமையை மீண்டும் அடைய ஒரு பிரிவாகச் செயல்படும் என்று நம்புகிறேன். கமேனியின் மரணம் மட்டுமல்லாமல், ஒரே நாளில் அந்த நாடு பெருமளவில் அழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாற்றம் விரைவில் தொடங்கும்.

எவ்வாறாயினும், மத்திய கிழக்கு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டும் எங்களது இலக்கை அடையும் வரை, இந்தத் தீவிரமான மற்றும் துல்லியமான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் இந்த வாரம் முழுவதும் தடையின்றித் தொடரும்” என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ஈரானின் ராணுவத் தளபதியும், பாதுகாப்பு அமைச்சரும் கொல்லப்பட்டதை ஈரானின் அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தி உள்ளது. ராணுவத் தளபதி ஜெனரல் அப்தோல் ரஹீம் மவுசவி, பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அஜீஸ் நசீர்சாதே ஆகியோர் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றபோது கொல்லப்பட்டதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து அந்த நாட்டில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஏராளமான மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி தங்கள் எதிர்ப்பை, சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஈரானுக்கு வெளியேயும் பல நாடுகளில் ஷியா பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், அயோதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), மத்திய கிழக்கு முழுவதும் உள்ள முக்கிய அமெரிக்க ராணுவ மையங்களைக் குறிவைத்து தாக்குதலை தொடங்கியுள்ளது. “ஆபரேஷன் ட்ரூத்ஃபுல் ப்ராமிஸ் 4” என பெயரிடப்பட்டுள்ள இந்த தாக்குதலில், ஆறு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஏழு அமெரிக்க ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles