இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த சிங்கக் கொடியை இறக்கி, அதற்குப் பதிலாகக் கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழகப் பதிவாளர் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழைமை குற்றத்தடுப்பு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து விடுக்கப்பட்ட விசேட உத்தரவின் பேரில், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்புப் பணியக அதிகாரிகளே இந்த விசாரணையை முன்னெடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 3 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட இந்த விசாரணையின் போது, துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகிய இருவரிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகத்தால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட அறிக்கைகள், ஆதாரங்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த விசாரணை இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.
பொலிஸ் குற்றத்தடுப்புப் பணியகத்தின் வாகனம் பல்கலைக்கழக பிரதான வளாகத்திற்குள் நுழைந்து, பதிவாளர் அலுவலகத்தில் நீண்ட நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தமை மாணவர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் மற்றும் தமது அலைபேசிகளில் காணொளிப் பதிவு செய்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாணவர்களிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

