மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும் என அறிவிப்பு

தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக மின்சார ஊழியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

மின்சார சபை கலைக்கப்பட்டு புதிதாக நிறுவப்பட்ட நான்கு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரிகளுக்கும், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிமை நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பு குறித்து மின்சார தொழில்நுட்ப பொறியியலாளர் மற்றும் அதிகார சபையின் உப தலைவர் நந்தன உதயகுமார கருத்துத் தெரிவிக்கையில் –

“மின்சார சபை கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட புதிய நிறுவனங்களின் நிர்வாகத்திற்கும், ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திடுவது உள்ளிட்ட 8 பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தோம். இன்றைய பேச்சுவார்த்தையில் எமது முன்மொழிவுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

எனினும், எமது 6 முக்கிய கோரிக்கைகள் தொடர்பில் தம்மால் தெளிவான பதிலை வழங்க முடியாது என பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து ஜனாதிபதி அல்லது விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரே தீர்மானிக்க வேண்டும் என நாம் அவர்களிடம் சுட்டிக்காட்டினோம். இன்று எமக்கு அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பம் கிடைத்து, அதில் சாதகமான தீர்வு எட்டப்பட்டால் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பரிசீலிப்போம். அவ்வாறு இல்லையெனில், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் எமது போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைக்குச் செல்ல நேரிடும்.” எனக் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles