ஹோர்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் நூற்றுக்கணக்கான கண்ணி வெடிகளை ஈரான் ராணுவம் வீசி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரபிக் கடலில் பெர்சியன் வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் ஹோர்முஸ் ஜலசந்தி இணைக்கிறது. இது 167 கி.மீ. நீளம், 50 கி.மீ. அகலம் கொண்டதாகும். இந்த ஜலசந்தியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் 33 கி.மீ. அகலம் மட்டுமே உள்ளது. அதிலும் கடல் ஆழமாக உள்ள 3 கி.மீ. அகலம் கொண்ட பகுதி வழியாகவே சரக்கு கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது. இது ஈரான் கடல் எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது.
தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவம் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஹோர்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முழுமையாக முடக்கி உள்ளது. இதன் காரணமாக இந்தியா உட்பட உலகம் முழுவதும் எல்பிஜி, சிஎன்ஜி, கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தியில் சுதந்திரமான சரக்கு கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக அப்பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல்கள் குவிக்கப்பட்டு உள்ளன.
இந்த சூழலில் ஹோர்முஸ் ஜலசந்தியில் நூற்றுக்கணக்கான கண்ணிவெடிகளை ஈரான் ராணுவம் வீசியிருக்கிறது. கடலுக்கு அடியில் மூழ்கியிருக்கும் இந்த கண்ணிவெடிகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க முடியும். எதிரிகளின் போர்க்கப்பல்கள், சரக்கு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் வரும்போது கண்ணி வெடிகளை வெடிக்கச் செய்து கப்பல்களை தகர்ப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இது குறித்து சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறியதாவது –
கடல் கண்ணி வெடிகள் 3 வகைகளாக தயாரிக்கப் படுகின்றன. முதல்வகை கண்ணிவெடிகள் கடலுக்கு அடியில் புதைந்திருக்கும். 2ஆவது வகை கண்ணிவெடிகள் கடலின் சில நூறு அடி ஆழத்தில் தண்ணீரில் மிதக்கும். இவற்றை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க முடியும். கடலின் மேல் பகுதியில் கப்பல்கள் செல்லும் போது இந்த வகை கண்ணிவெடிகள் மேலெழுந்து வந்து வெடித்துச் சிதறும்.
3-வது வகை கண்ணிவெடிகள் கடலுக்கு அடியில் மிதக்கும். இவற்றை ரிமோட் கண்ட்ரோல் மூலம் கடலின் மேற்பகுதி்க்கு கொண்டு வந்து குறிப்பிட்ட இலக்கை நோக்கி நகர்த்தி செல்ல முடியும். இதன்படி எதிரிகளின் கப்பல்களை நோக்கி சீறிப் பாயும் கண்ணிவெடிகள் அவற்றின் மீது மோதி வெடித்துச் சிதறும். ஈரான் ராணுவத்திடம் 3 வகையான கண்ணிவெடிகளும் உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
