ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்!

ஈரானின் பிரதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையமாக கருதப்படும் கார்க் (Kharg) தீவு மீது அமெரிக்கா குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

கார்க் தீவிலுள்ள ஒவ்வொரு இராணுவ இலக்குகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.

சுமார் 5 மைல் நீளம் கொண்ட இந்த சிறிய தீவு, ஈரான் கடற்கரையிலிருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது.

கார்க் தீவு அந்நாட்டின் பிரதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையமாகக் கருதப்படுவதுடன், இது ஈரானின் ‘பெற்றோலிய உயிர்நாடி’ என்றும் அழைக்கப்படுகிறது.

ஈரான் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை இந்தத் தீவின் மூலமே முன்னெடுக்கின்றது.

அத்துடன், ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் கொள்வனவாளரான சீனா, இந்தத் தீவிலிருந்தே எண்ணெயைப் பெற்றுக்கொள்கிறது.

எனவே, கார்க் தீவு மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் ஈரானிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கார்க் தீவு மீதான தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்கப் படைகள் கார்க் தீவின் இராணுவ இலக்குகளைத் தாக்கினாலும், எண்ணெய் ஏற்றுமதி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் எரிபொருள் கப்பல்கள் மீது ஈரானோ அல்லது வேறு தரப்பினரோ தாக்குதல் நடத்தினால், இந்தத் தீர்மானம் குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரானின் எண்ணெய் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் பழிவாங்கும் நடவடிக்கையாக, அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் பிராந்தியத்திலுள்ள எண்ணெய் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானின் பிரதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவின் இராணுவ இலக்குகள் மீது நடத்தப்பட்ட அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானிய ஆயுதப் படைகளின் கூட்டு நடவடிக்கை கட்டளைப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles