கறுப்புக்கொடி விவகாரம்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட 3 மாணவர்களும் வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின் விடுதலை!

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 4ஆம் திகதி ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை இறக்கி, கறுப்புக் கொடி ஏற்றிய விவகாரத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கலைப்பீட மாணவர் ஒன்றியம் ஆகியவற்றைச் சேர்ந்த 3 மாணவர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கக் கொடியை இறக்கி – அதற்குப் பதிலாகக் கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், 03 மாணவர்களை யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவில் கடந்த 16 ஆம் திகதி முற்படுத்துமாறு பலகலைக்கழகப் பதிவாளரை மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி கடந்த 13 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் கேட்டிருந்தார்.

அதன்படி, தர்மலிங்கம் ஜதுர்சன், தயாபரன் லஜிதரன், ஏ. அபிசேக் ஆகியோரை யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுக்குச் செல்லுமாறு பல்கலைக்கழக ஒழுக்காற்று அதிகாரியினால் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

அந்த அறிவுறுத்தலுக்கமைய இன்று காலை மாணவர்கள் மூவரும் யாழ்ப்பாணம் பொலீஸ் தலைமைக் காரியாலயத்தில் அமைந்துள்ள மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுக்குச் சென்ற போது, அவர்களின் வாக்குமூலங்களைப் பொலீசார் பதிவு செய்யதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாணவர்கள் சுமார் 5 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாங்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

மாணவர்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்காக யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் மாணவர்களுடன் பொலீஸ் நிலையத்துக்குச் சென்றிருந்தார்.

கடந்த வாரம் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள், நேற்று மாணவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் என்பன சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், சட்டம் அதிபரின் அறிவுறுத்தல்களுக்கமைய அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles