யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் நேற்று முன்தினம் பின்னிரவு முதல் மர்மமான முறையில் காணாமல் போயிருக்கிறார்.
அவருடன் உடனடியாகத் தொடர்புகொள்ள முடியாதிருப்பதுடன், அவரது வீட்டிலோ, வெறெங்குமோ அவரைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவரைப் பாதுகாப்பாகக் கண்டுபிடிப்பதற்கு உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது-
யாழ்ப்பாணம் – அரியாலை, புங்கன்குளம் பகுதியில் தனது மகளுடன் வசித்து வந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளருடன் நேற்று அதிகாலை முதல் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் அவரைத் தேடி அவரது வீட்டுக்குச் சென்ற உறவினர்கள் அவர் வீட்டில் இல்லாததை அவதானித்துள்ளனர். வீட்டிலும், அருகிலும் இருந்த கண்காணிப்புக் கமெராக்கள் நொருக்கப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்துள்ளது.
நிலைமையின் பாரதூரம் கருதி உறவினர்களால் யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்தில் நேற்றுக் காலை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக யாழ்பாணம் பொலீசாருடன் தொடர்பு கொண்ட போது, விரிவுரையாளரைக் காணவில்லை என்று அவரது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் உறுதிப்படுத்தினர்.
குறித்த விரிவுரையாளருக்கும், நெருங்கிய உறவினர்களுக்குமிடையிலான குடும்பப்பகை காரணமாக ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் குடும்பத்தகறாறு காரணமாக அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெறுகின்றன.
இதேவேளை, தமது உறுப்பினர் ஒருவர் தனது இருப்பிடத்தில் காணப்படாமை குறித்துத் தாம் கவலையடைந்துள்ளதாகவும், அவர் எங்கிருக்கிறார் என்பதை அறிய முடியாமல் இருப்பதும், அவரது வீட்டைச் சுற்றிப் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமெராக்கள் அடித்து நொருக்கப்பட்டிருக்கின்றமையும் நிலைமையின் பாரதூரத்தைக் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அவரைத் தாமதமின்றிப் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்படுவதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரியிருக்கிறது.
மேலும், இந்த விரிவுரையாளர் காணாமல் போன சம்பவம் உடனடியாகப் பொலீஸ்மா அதிபர் உட்பட உயர் பொலீஸ் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டு விசாரணைகளை விரைவாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆசிரியர் சங்கம் நேற்றிரவு வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
