அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் அரசுக்கு இடையிலான வார்த்தைப் போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் இரு நாடுகளும் பரஸ்பரம் மிரட்டல்களை விடுத்து வருவதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை அடுத்த 48 மணிநேரத்திற்குள் ஈரான் திறந்துவிட வேண்டும் என்றும், தவறினால் ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் தரைமட்டமாக்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கைக்கு ஈரான் தற்போது கடும் எதிர்வினையாற்றியுள்ளது. இது குறித்து ஈரானிய அரச ஊடகங்களை மேற்கோள் காட்டி பிபிசி வெளியிட்டுள்ள தகவலின்படி –
“ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எரிசக்தி உட்கட்டமைப்புகளையும் ஈரான் இலக்கு வைக்கும்.”என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது.
உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டால் உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் விலையில் பெரும் தாக்கம் ஏற்படும். தற்போது இரு நாடுகளும் நேரடித் தாக்குதலில் இறங்குவோம் என எச்சரித்து வருவதால், இப்பிராந்தியத்தில் எந்த நேரமும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
