
ஈரானுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான இராணுவத் தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு இராணுவத்திற்கு உத்தரவிடப்போவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் மின் விநியோகக் கட்டமைப்பை அமெரிக்கா இலக்கு வைத்தால், பதிலுக்கு இஸ்ரேலின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் முழுவதும் தொடரும் என்று ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதில், “தற்போது நடைபெற்று வரும் கூட்டங்கள் மற்றும் விவாதங்களின் வெற்றியைப் பொறுத்து, ஈரான் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் எழுதியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறக்க ஈரான் அனுமதிக்கவில்லை என்றால், திங்கள்கிழமை மாலைக்குள் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் முன்னதாக எச்சரித்திருந்தார்.
கடந்த வாரம் வரை, ஈரானுடன் போர்நிறுத்தத்தை (Ceasefire) மேற்கொள்வதில் தமக்கு விருப்பமில்லை என்று ட்ரம்ப் கூறிவந்தார். “நாம் பேச்சுவார்த்தை நடத்தலாம், ஆனால் நான் போர்நிறுத்தத்தை விரும்பவில்லை” என்று அவர் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.
