பயணிகளுடன் தரக்குறைவாக நடந்த தனியார் பஸ் நடத்துநருக்கு 8 நாட்கள் பணித் தடை!

பயணிகளுடன் தரக்குறைவாக நடந்து கொண்டமை உள்ளிட்ட இருவேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தனியார் பஸ் நடத்துநருக்கு எட்டு நாட்கள் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த 07.03.2026 அன்று அதிகார சபையின் திடீர் பரிசோதனை உத்தியோகத்தர்கள், பஸ்ஸில் பரிசோதனையில் ஈடுபட்டபோது, குற்றப்பத்திரிகை வழங்க அனுமதிப்பத்திரத்தைக் கோரிய அதிகாரிகளை குறித்த நடத்துநர் அவமதித்துள்ளார். அத்துடன், 26.03.2026 அன்று காலை பரந்தனிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சேவையின்போது அவர் தரக்குறைவாகப் பேசியுள்ளமையும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், குறித்த நபரின் சுய ஒழுக்க மீறல் மற்றும் வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் நடத்துநராகவோ சாரதியாகவோ கடமையாற்றத் தகுதியற்றவர் என இனங்காணப்பட்டமையால், அவருக்கு வடக்கு மாகாணத்தில் எந்தவித பயணிகள் பஸ்ஸிலும் கடமையாற்ற முடியாதவாறு 8 நாட்கள் தொடர்ச்சியான பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறிச் செயல்பட்டால், குறித்த நபருக்கும் அவரைச் சேவையில் ஈடுபடுத்தும் பஸ் உரிமையாளருக்கும் எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் இவ்வாறான ஒழுக்க மீறல்கள் மற்றும் விதிமீறல்களுக்கு எதிராக முன்னரும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் எவ்வித அசௌகரியங்களை எதிர்கொண்டாலோ அல்லது நடத்துநர்கள் மற்றும் சாரதிகளின் தரக்குறைவான செயல்பாடுகள் அவதானிக்கப்பட்டாலோ, அது தொடர்பான முறைப்பாடுகளை உரிய ஆதாரங்களுடன் (ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) 071, 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு பொதுமக்கள் உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என்று அதிகார சபையின் தலைவர் அறிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles