அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையும் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
படிப்பின் பின்னரான வரையறுக்கப்பட்ட சேவை வைத்தியர்களின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றது.
குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்ததுடன், நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
எனினும், வெளியிடப்பட்டுள்ள நியமனப் பட்டியலை உடனடியாக நீக்கி, பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த நியமனங்கள் தொடர்பில் குறித்த சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதை சுகாதார அமைச்சர் இதுவரை நிராகரித்து வருகிறார்.
மருத்துவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று ஒரு சந்திப்பிற்கு அனுமதி வழங்கியிருந்த போதிலும், பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டதால் குறித்த பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
