மத்திய கிழக்கில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதையும், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கான வாய்ப்புகளையும் இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது.
இந்த முன்னேற்றமானது பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும், பொதுமக்களின் மனிதாபிமானத் துயரங்களைக் குறைக்கவும் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கையாகும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பிராந்தியத்தில் நிரந்தரமான மற்றும் நிலையான தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது.
பிராந்தியத்திலுள்ள அனைத்து சமூகங்களினதும் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உள்ளடக்கிய அமைதிப் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை இலங்கை வலியுறுத்தியுள்ளது.
இந்தப் போர் நிறுத்தத்தை சாத்தியப்படுத்தவும், பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் தூதரக ரீதியாகப் பங்களிப்பு செய்த நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது
