இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறை அமைப்பான மொஸாட்டின் புதிய தலைவராக றோமன் கோஃப்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் அரசின் ஆலோசனைக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு பிரதமர் நெதன்யாகு இவரைத் தலைவராக நியமித்துள்ளார்.
இஸ்ரேல் அரசின் முன்னாள் உயர்நீதிமன்றத் தலைவர் தலைமையிலான குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த முடிவை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் பிரதமர் நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார். கோஃப்மன் துணிச்சலான, சமயோசித புத்தியுடன் செயல்படும் சிறந்த அதிகாரி என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இராணுவச் செயலாளராக பணியாற்றி வரும் கோஃப்மன் எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி உளவுத்துறை தலைவராகப் பதவியேற்கவுள்ளார். அடுத்த ஐந்தாண்டு காலம் அவர் இந்தப் பதவியில் இருப்பார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்துடன் தற்போதைய தலைவர் டேவிட் பார்னியா பதவிக்காலம் முடிந்தபின் இவர் பதவியேற்கவுள்ளார்.
