நாவற்குழி பிக்கு மீதான பாலியல் குற்றச்சாட்டு; சயந்தனே முன்னின்று செயல்பட்டார்

நாவற்குழி விகாரையில் சம்பவத்தின் பின்னணியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் செயலாளராகக் கடமையாற்றும் சயந்தன் உள்ளிட்டோர் முன்னின்று செயற்பட்டுள்ளனர் என பலாங்கொடை கஸ்ஸப தேரர் பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி நாவற்குழி விகாரையில் பிக்கு ஒருவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை திட்டமிட்ட ஒரு சதியாகும். ஒரு மதத் தலத்திற்குரிய ஆடை ஒழுக்கத்தை மீறி பிரவேசிக்க முயன்ற யுவதிக்கு அறிவுறுத்தியதற்காக, குறித்த பிக்கு மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் செயலாளராகக் கடமையாற்றும் சயந்தன் உள்ளிட்டோர் முன்னின்று செயற்பட்டுள்ளனர்.

எவ்வித தவறும் செய்யாத பிக்குவை விகாரையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது. இது வடக்கிலிருந்து பிக்குகளைத் தந்திரோபாயமாக வெளியேற்றும் ஒரு முயற்சியாகும். பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதாகக் கூறும் அநுர குமாரவும் அரசாங்கமும், இவ்விடயத்தில் மௌனம் காப்பது ஏன்?

ஒரு மதத்தின் எழுச்சியும் விழிப்புணர்வும் அந்த மதம் சார்ந்த மக்கள் குறைவாக வாழும் பகுதிகளிலேயே ஏற்படுத்தப்பட வேண்டும்.

அந்த வகையில், பௌத்த எழுச்சி என்பது தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அவசியமானது. ஆனால், திட்டமிட்ட அடிப்படையில் அங்கிருக்கும் பிக்குகளை வெளியேற்றிவிட்டு, அப்பிரதேசங்களைத் தனித்துவமான வலயங்களாக மாற்றச் சூழ்ச்சிகள் நடக்கின்றன.

பிக்குகளை வடக்கிலிருந்து வெளியேற்றி, அங்கு தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை உறுதிப்படுத்த இந்த அரசாங்கம் முற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.

நாவற்குழி விகாரையில் அநியாயமாகப் பாதிக்கப்பட்ட பிக்கு, மீண்டும் அந்த விகாரையிலேயே தங்கித் தனது மதப் பணிகளைத் தொடர்வதற்கான சட்டப் பூர்வமான பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

இதற்காகப் புத்த சாசன அமைச்சருக்கு இரண்டு வார கால அவகாசத்தை வழங்குகிறோம். இந்த காலப்பகுதிக்குள் குறித்த பிக்குவுக்கு நீதி வழங்கப்பட்டு, அவர் மீண்டும் நாவற்குழி விகாரைக்குச் செல்வதற்கான அனுமதி வழங்கப்படாவிட்டால், மகா சங்கத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து பௌத்த சாசன அமைச்சுக்கு முன்னால் பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம். – என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles