கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீள அழைக்கும் அதிகாரம், மக்களின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் – நிமல் புஞ்சிஹேவா

Colombo (News 1st) கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீள அழைக்கும் அதிகாரம், மக்களின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களை மீள அழைக்கும் அதிகாரத்தை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு வழங்கும் சட்டமூலம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்தார்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கே  அதிகாரம் வழங்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நிர்ணயித்த கால அளவை தாண்டி அந்தந்த பதவிகளில் செயற்பட மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டியது அமைச்சர் அல்ல, மக்களே அதற்கான அதிகாரத்தை வழங்க வேண்டும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இது நாட்டின் ஜனநாயகத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான அதிகாரத்தை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு வழங்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவின் தனிப்பட்ட பிரேரணை, சட்டமூலமாக  வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகர சபைகள் கட்டளைச் சட்டம், மாநகர சபைகள் திருத்தச் சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டம் ஆகிய சட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள சில சரத்துகளை திருத்துவதற்காக இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த சரத்துகள்  திருத்தப்பட்டால் தற்போது கலைக்கப்பட்டுள்ள மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகளை  விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிர்ணயிக்கும் கால எல்லை வரை மீண்டும் ஸ்தாபிக் சந்தர்ப்பம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles