Sangathy
News

ரஷ்யா முன்வைத்த இஸ்ரேல், ஹமாஸ் போர் நிறுத்த பிரேரணை நிராகரிப்பு

இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர்  தொடர்ந்து 11 ஆவது நாளாக நடந்து வருகிறது.

இதற்கிடையே, போர் நிறுத்தம், பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் எனும் பிரேரணையை ஐ.நா. பாதுகாப்பு அவையில் ரஷ்யா கொண்டு வந்தது.

இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ரஷ்யாவின் வரைவு பிரேரணையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை நிராகரித்துள்ளது.

ஐ.நா பாதுகாப்பு அவையில் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் உட்பட மொத்தம் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இங்கு கொண்டுவரப்படும் ஒரு தீர்மானம் நிறைவேற 9 நாடுகளின் ஆதரவு தேவை. இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ரஷ்யா கொண்டு வந்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் பிரேரணைக்கு ஆதரவாக சீனா, கபோன், மொசாம்பிக், ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 5 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.  எதிராக இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய 4 நாடுகள் வாக்களித்தன. அல்பேனியா, பிரேசில், ஈக்வடார், கானா, மால்டா, ஸ்விட்சர்லாந்து ஆகிய 6 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இதனால், இந்த பிரேரணை தோல்வி அடைந்தது.

முன்னதாக, இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றிய ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ், இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் தொடர்பாக ரஷ்ய பிரேரணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, இதனை ஆதரிக்க முடியாது. ஹமாஸ் அமைப்பின் செயலை கண்டிக்காததன் மூலம் அத்தகைய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக ரஷ்யா உள்ளது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அப்பாவி மக்களை கொன்றுள்ளது, கடத்திச் சென்றுள்ளது. இதில், அமெரிக்கக் குடும்பங்களும் உள்ளன. காஸா மக்கள் தற்போது சந்தித்து வரும் துயரங்களுக்குக் காரணம் ஹமாஸ்தான், என குறிப்பிட்டார்.

இதேபோல், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் தூதர்களும் ரஷ்ய பிரேரணைக்கு எதிராக தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

Related posts

China’s cosmic ambitions as seen from the skies

Lincoln

Insane Political Leaders

Lincoln

ரயிலின் மேல் ஏறி பயணித்த பயணி தவறி வீழ்ந்து உயிரிழப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy